Friday, April 19, 2019

கல்லணை - Kallanai


கல்லணை தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணை கரிகால சோழனால் 1 ஆம் நூற்றாண்டில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டது.

கல்லணை வரலாறு

உலகில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளில் மிகப் பழமையானதும், பல நூற்றாண்டுகளுக்கு (2000 ஆண்டுக்கு மேல் பழமையானது) மேலாகப் பயன்பாட்டில் இருந்து வருவது கல்லனை.

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் சங்ககாலத்தில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

சங்ககாலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழினுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 2000 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

கி.பி. 1777ம் ஆண்டு மெக்கன்சி ஆவணக்குறிப்புகளில் அனைக்கட்டி என கல்லனை குறிப்பிடப்பட்டுள்ளது. பேயர்டு சுமித் (Baird Smith) என்ற ஆங்கில பொறியியல் வல்லுனர் 1853ம் ஆண்டில் எழுதிய “தென்னிந்தியாவின் பாசனம்” என்ற நூலில் கல்லனையை ஒரு மிகச் சிறந்த பொறியியல் சாதனை எனக் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் இந்த அணை எப்படி சாத்தியம்? என்ற கேள்வி அவர்களிடம் இருந்து கொண்டே இருந்தது. ஒரு சமயம் மணற்போக்கிகள் அமைக்க கல்லணையை ஒட்டி 12 அடி ஆழம் தோண்டிய போதுதான் இதற்கான விடை அவருக்குக் கிடைத்தது. மிகப்பெரும் பாறைகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு கல்லணை கட்டப்பட்டிருந்தது. பாறைகளுக்கிடையே களிமண் பூச்சுகள் மட்டுமே இருந்தது.

தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று.

Courtesy: Google Maps















No comments:

Post a Comment