Tuesday, December 26, 2017

கொல்லிமலை - Kolli Hills

மலைகளின் இளவரசன் கொல்லிமலைக்கு குடும்பத்துடன் ஓர் சுற்றுலா!

துறையூரிலிருந்து தம்மம்பட்டி, வளகொம்பை, வெளிக்காடு, குளிவளவு வழியாக கொல்லி மலையை அடைந்தோம். பெரும்பாலும் நாமக்கல், சேந்தமங்கலம், காரவல்லி வழியாக பிரதான 72 கொண்டை ஊசி வளைவு பாதையில் பயணிப்பர். எங்களுக்கு மாற்றுப்பாதை தூரம் குறைவென்பதால் அதை தேர்ந்தெடுத்தோம் (இப்பாதை சற்று கரடுமுரடானது ஆதலால் இரவில் இப்பாதையை தவிர்த்தல் நல்லது)



வளக்கொம்பையிலிருந்து 2.75 கிமீ தொலைவில் வரட்டாறு குறுக்கே ஓர் தடுப்பணை (Ezhuthukkal Seradi Check Dam) உள்ளது. மழைக் காலங்களிலோ அல்லது நீர் வரத்து இருப்பின் அங்கு சற்று இளைப்பாறலாம்.


நம்ம அருவி

கடந்த மாதம் (நவம்பர்) நீர் வரத்து நன்றாக இருந்ததாம், தற்சமயம் மிகவும் குறைவாகவே நீர் வரத்து!



எட்டுக்கை அம்மன் கோவில் (கொல்லிப்பாவைக் கோவில்)

புராணங்களின் படி,  அக்காலத்தில் கொல்லிமலையில் தவம் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக்கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று கூறப்படுகிறது. பெண் உருவமுடைய கொல்லிப்பாவையின் உடல் உறுப்புகள் அசையும் தன்மையுடையது. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். கொல்லிப்பாவை பற்றி நற்றிணை, குறுந்தொகை செய்யுட்களில் கூறப்பட்டுள்ளது. கொல்லிப்பாவை என்ற அக்காவல் தெய்வம் தான் தற்போது எட்டுக்கை அம்மனாக வழங்கப்படுகிறது.

சாமியாடிகள் (அருளாடிகள்)

குறிப்பிட்ட சிறு மற்றும் பெருந்தெய்வம் ஒன்றின் சக்தி ஒருவர் மீது ஆட்கொள்ளப்படுவதாக கருதப்படுகிறது. அவ்வாறு சக்தியேறப் பெற்றவர் அருளாடி அல்லது சாமியாடி என்று அழைக்கப்படுவார்.  வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டி அருளாடியிடம் குறைகளைக் கூறுவார்கள். தன்வயம் இழந்த ஆவேச நிலையில் அவர் அக்குறைகளுக்குத் தீர்வோ பரிகாரமோ சொல்லுவார். பெரும்பாலும் சாமியாடுபவர்களே கேட்பவர்களின் உளக்குறிப்புணர்ந்து அவர்களுடைய குறைகளைச் சொல்லி விடுவார்கள். சாமியாடிகள் குறித்து எவ்வளவோ ஆய்வுகளும் நம்பிக்கைகளும் உள்ளன.

ஆனால் கொல்லிமலையில் சாமியாடிகள் என்ற பெயரில் வர்த்தகமே! சாமியாடிகள் தரும் கயிறுகளிலும் பட்டயங்களிலும் இறைவன் அருள் இருப்பதாக ஏமாற வேண்டாம்.








கருங்கயம் சோழமுடையார் கோவில்

கிபி 950 முதல் 955 வரை சோழ தேசத்தை ஆண்ட கண்டராதித்த சோழனால் கட்டப்பட்டப் பள்ளிப்படைக் கோவில். இன்று அதன் சிறப்புகளை யாரும் உணரா வண்ணம் ஆள் அரவமின்றி அமைதியாக ...

கோவிலின் வரலாறு குறித்த அறிவிப்பு பலகை அலங்காரமாக இருக்கிறதே தவிர படிக்க இயலாமல்!




சோழமுடையாரை வணங்கிவிட்டு ஆகாயகங்கை அருவி நோக்கி... அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு எதிரே தோராயமாக 1000 படிகள் இறங்க வேண்டும்.







முடிவில் சற்று கடின பாதை


ஆர்ப்பரிக்கும் ஆகாயகங்கை அருவி (பொருளுணர்ந்து வைத்த பெயர் "ஆகாயகங்கை") ... அழகை விளிக்க வார்த்தைகள் இல்லை.



அருவி சாரலில் குளித்து மீண்டும் 1000 படிகள் ஏறி ... வழியில் களைப்பு நீங்க மோர் அருந்திவிட்டு .. அறப்பளீஸ்வரர் கோவில் வாகன நிறுத்துமிடத்தை அடைந்தாயிற்று. பெரிய உணவகங்கள் ஏதுமில்லை ஆனால் பசியாற்ற சிறுக் கடைகள் உள்ளன. பரோட்டா, தோசை என கிடைத்தவற்றை உண்டு பசியாற்றிவிட்டு அறப்பளீஸ்வரர் கோவில்.

அறப்பளீஸ்வரர் கோவில்

அக்காலத்தில் கொல்லிமலையில் வாழ்ந்த சிவனடியார்கள் இவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்றினை நிறுவி வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ‘அறை’ என்றால் சிறிய மலை, ‘அறைப்பள்ளி’ என்றால் மலைமேல் உள்ள கோவில், இறைவன் ஈஸ்வரர் என்பதால் அறைப்பள்ளி ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி அறப்பளீஸ்வரர் ஆனதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இவ்விடம் விளைநிலமாக மாறி, சிவலிங்கம் மண்ணுள் புதைந்தது. பின்னாளில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது அவருடைய கலப்பை சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் பட்டு அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மக்கள் இங்கு கோவில் அமைத்து வழிபட துவங்கியிருக்கின்றனர். இப்பொழுதும் கூட அறப்பளீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் அத்தழும்பு இருப்பதாக கூறப்படுகிறது.






சிற்றருவி

அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு அருகில் இருக்கும் சிற்றருவி.. நன்கு பராமரித்தால் அருமையான சுற்றுலா இடமாக இருக்கும். ஆனால் அருவி .. பொதுக் கழிப்பிடமாக!






இன்றைய பொழுதை கழித்தாயிற்று. கொல்லிமலையில் தற்சமயம் புதிதாக தொடங்கப்பட்ட விடுதியில் இரவு ஓய்வெடுக்க ... நல்ல விடுதி ...குன்று ஒன்றின் உச்சியில் சுற்றிலும் 360' கோணத்தில் மலைகளை இரசிக்கும் வண்ணம்!





சந்தன பாறை அருவி

நன்றாக ஓய்வெடுத்து விட்டு சூடான காலை உணவை முடித்துவிட்டு சந்தன பாறை அருவி (மழைக்காலங்களில் மட்டும் நீரோடும் அருவி)


மாசி பெரியசாமி கோவில்

சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்கள் கொண்ட காவல்தெய்வம் தான் இந்த மாசி பெரியசாமி. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். கொல்லியில் அமைந்துள்ள குன்றுகளில் மிகப்பெரிய குன்றான மாசிக்குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது.


வயல்களை கடந்து சற்றே கரடுமுரடான பாதைகளை கடந்து மலை ஏற வேண்டும்











இங்கு தினமும் குறைந்தது 4-5 ஆடு/சேவல் பலியிடப்படுகின்றன. விஷேச நாட்களில் 100 கணக்கான ஆடு மற்றும் சேவல் பலியிடப்படுகின்றன. மலைவாழ் மற்றும் இப்பகுதியிலுள்ள பெரும்பாலானோரின் குலதெய்வம் மாசி பெரியசாமி.

மாசி பெரியசாமி கோவில் செல்லும் வழியில் உள்ள  பழைய எட்டுக்கை அம்மன் கோவில். இதுதான் புராதனக் கோவில், ஆனால் ஆள் அரவமின்றி !


எத்துனை பெரிய மரங்கள் (அருகிலுள்ள ஆள் மற்றும் பசுக்களின் அளவுகளோடு ஒப்பிட்டு பாருங்கள்)



அருகிலுள்ள நீரோடை




ஆங்காங்கே பலா மரங்கள் ... அன்னாசி தோட்டங்கள்



மாசிலா அருவி

தான் வரும் வழியெல்லாம் உள்ள மூலிகைகளை ஒன்றிணைத்து அவற்றில் உள்ள சக்திகளை எல்லாம் தனக்குள் கொண்டு பாறைகளில் இருந்து கொட்டும் ஸ்படிகம் போன்ற மூலிகைத் தண்ணீர் பாயும் அருவியாக விளங்குகிறது மாசிலா அருவி. ஆகாய கங்கையைப் போல் அல்லாது இந்த மாசிலா அருவியை சென்றடைவது சற்று சுலபமாக உள்ளது.





இங்கு பசியாற சூடான பனியாரங்கள் (காரம் மற்றும் இனிப்பு) கிடைக்கின்றன.

வல்வில் ஓரி சிலை

செம்மேட்டில் உள்ள கொல்லிமலை அரசன் வல்வில் ஓரி சிலை. கடையேழு வள்ளல்களுள் ஒருவன் ஓரி. (முதல், இடை, கடை என வள்ளல்களை வகுத்ததில் எத்துனை அரசியல்)


வல்வில் ஓரி குறித்த சங்க இலக்கிய தகவல்

வில்லாற்றல் மிக்க தமிழ் வேந்தன்.ஒரு முறை அம்பெய்தால் யானை, புலி, கலைமான், பன்றி மற்றும் உடும்பு ஆகிய ஐந்து விலங்குகளையும் மாய்த்த வில்லாண்மை உடையவன்.

யானை, புலி என இருந்த காடு தற்சமயம் வெறும் மான், பன்றி மற்றும் உடும்புகளோடு குறுகி விட்டன ... எதிர்காலத்தில் எல்லாமே ஏடுகளில் மட்டுமே மிஞ்சும் போல!

சீக்குப்பார்வை / சீக்குப்பாறை நோக்குமுனை







வயல் வெளியெங்கும் மயில்கள் 



மாலை 3.30 மணிக்குள் தாவரவியல் பூங்கா மற்றும் படகுத்துறை மூடப்படுகிறது. பெரிய ஏரி என்றில்லை சிறுவர்கள் ஏமாறாமலிருக்க படகுகள் உள்ளன அவ்வளவே!

வாசலூர்பட்டி படகுத் துறை







சூடான மூலிகை சூப்போடு கொல்லிமலை பயணம் இனிதே நிறைவுற்று!

மலையிலிருந்து 72 கொண்டை ஊசி வளைவுகளின் வழியே மலையிறங்கினோம், இருசக்கர வாகனத்தில் பயணித்தால் மிக அருமையாக இருக்கும் மலைப் பாதை!