Saturday, September 1, 2018

இஸ்கான் கோவில் சென்னை - ISKCON Temple Chennai

சோழிங்கநல்லூர் கிழக்குக் கடற்கரைச் சாலை "அக்கரை" பகுதியில் பக்கிங்காம் கால்வாயின் கிழக்குக் கரையில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் [ISKCON] சார்பாக நிறுவப்பட்ட கிருஷ்ணர் கோவில் சுருக்கமாக இஸ்கான் கோவில் என்றழைக்கப்படுகிறது.

பக்கிங்காம் கால்வாய்: சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விசயவாடாவில் இருந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோ மீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19-20 ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது. இதன் தற்போதையை நிலை வேதனைக்குரிய ஓன்று!

கோவில் வளாகம் தூய்மையாகவும் அமைதியாகவும் ... தியானிக்க ஏற்ற இடம்.

இவ்வழியே நாம் பலமுறை கடந்திருந்தாலும் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு தற்பொழுது தான் அமைந்தது.



பலராமர், சுபத்ரா மற்றும் ஜகநாதர்


ஸ்ரீ ராதா கிருஷ்ணா மற்றும்  லலிதா, விசாகா



கோவில் வளாகத்தில் கிருஷ்ணர் கதைகள் ஓவியங்களாக ...

கம்சனின் சிறையில் பிறந்த ஸ்ரீகிருஷ்ணருக்கு அவரது தாய் தந்தையர் வசுதேவரும், தேவகியும் பிரார்த்தனை செலுத்துதல்.


வசுதேவர்  ஸ்ரீகிருஷ்ணரை கூடையில் வைத்து கோகுலத்துக்குத் தூக்கிச் செல்லும் காட்சி, யமுனை நதி இரண்டாகப் பிரிந்து வழி விடுகிறது, கொட்டும் மழைக்கு குடையாக ஆதிசேஷன் பின்னால் வருகிறார்.


பூதனை எனும் அரக்கி தன்னுடைய மார்பில் விஷத்தைப் பூசி  ஸ்ரீகிருஷ்ணருக்கு பால் புகட்ட அவர் பாலோடு அவள் உயிரையும் உறிஞ்சி எடுத்து விடுகிறார். ஆனாலும், அவள் மறைந்த பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் அவருக்கு தாயார் அந்தஸ்தை கொடுக்கிறார்.



வெண்ணெய் திருடியதற்காக தண்டிக்கும் யசோதை, மகனின் வால் தனத்தைக் கட்டுப் படுத்த உரலில் கட்டிப் போடுகிறார்.


வெண்ணை திருடி உண்ணும் ஸ்ரீகிருஷ்ணர்.


காலியா என்ற பாம்பின் தலைகள் மீது நடனம், அந்தப் பாம்பின் மனைவிகள் தங்கள் கணவனை மன்னித்து அருளுமாறு பிரார்த்தனை செய்கின்றனர்.


கோபியர்களின் உடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மரத்தின் மேலே அமர்ந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணர்.








ஸ்ரீகிருஷ்ணர் இந்திரனால் உண்டான பெரும் மழையில் இருந்து பிருந்தாவனத்தைக் காக்க கோவர்த்தன கிரியை இடதுக்கை சுண்டு விரலால் தூக்கி நின்ற காட்சி.




கம்சனின் அரண்மனை வீரவிளையாட்டு மண்டபத்தில் குவளையப்பீடா என்ற யானையை  ஸ்ரீகிருஷ்ணர் சண்டையிட்டு கொல்லும் காட்சி.





நாளை (2-Sep-18) "கிருஷ்ண ஜெயந்தி"  என்பதால் அதற்கான பூஜைகள்!