Sunday, May 13, 2018

சோளிங்கர் - Sholinghur


வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கருக்கு உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக சென்றிருந்தோம். திருமண மண்டபம், 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான திருக்கடிகை ஆலயத்திற்கு அருகில் என்பதால் திருமண விழா முடிந்ததும் அப்படியே கோவிலை நோக்கி ஒரு பயணம்.


பேருந்து நிறுத்தத்திலிருந்து மலை அடிவாரம் வரை ஆட்டோ / ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

சிறியமலை, பெரியமலை என இரண்டு மலைகள் உள்ளன இங்கே! பெரிய மலைக்கு எதிரில் இயற்கை அழகோடு சிறியமலை (406 படிகள்) மீது அமைந்துள்ளது யோக ஆஞ்சநேயர் கோயில். யோகஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்களில் ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம், மற்ற இரு கைகளில் ஜபமாலை உள்ளன.

சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது.

சிறியமலை


பெரியமலை சுமார் 750 அடி உயரத்தில் (1305 படிகள்) கடிகாசலம் எனும் ஒரே மலை குன்றின் மீது 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ள அழகிய கோயில். இத்திருக்கோவிலின் மூலவர் நரசிம்மர் யோக நிலையில் வீற்றிருக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரின் ஆலயமும் உள்ளது.

பெரியமலை


பெரியமலை தோரணவாயில்



பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர் மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் காட்சியளிக்கிறார்.

மலையின் அத்துனை படிகளும் வெயில் படா வண்ணம் மேற்கூறை அமைக்கப்பட்டுள்ளதால் சிரமமின்றி அனைத்து வயதினரும் மலையேறலாம். வயது முதிர்ந்தோர்  / நடக்க முடியாதோர் தேவைகளுக்காகக் கட்டண அடிப்படையிலான டோலி வசதியுண்டு.




பெரியமலையின் இடையிலுள்ள சிதைந்தக் கோவில்


கோவில் வழிபாட்டிற்கு இல்லாமல் பூட்டப்படுள்ளது. சிதைந்த கோவிலின் உள்ளே சிதையாதச்  சிற்பத்தூண்கள் ... இவற்றை கோவில் நிர்வாகம் பராமரித்துப் பாதுகாக்கலாம்.



வழி நெடுக குரங்குக் கூட்டங்கள் மிக அதிகம் ஆதலால் தின்பண்டங்களையோ, குடிநீர் பாட்டிலையோ வெளியே தெரியும் வண்ணம் கொண்டு செல்வதை தவிர்த்தல் நன்று.


தலவரலாறு (வலையிலிருந்து)

ஒரு "கடிகை" நேரம், அதாவது ஒரு நாழிகை (4 நிமிடங்கள்) மட்டுமே, இந்த திருத்தலத்தில் இருந்தாலே மோட்சம் கிட்டிடுமாம்! அத்தனை பெருமை உடையது திருக்கடிகை / கடிகாசலம் என்று அழைக்கப்படும் சோளிங்கர்.

பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். விஸ்வாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு வரம் பெற்றாராம். அதேபோல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டு அவர்கள் இங்கு தவமிருந்தனர்.

ராமாவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் ஆஞ்சநேயரிடம், இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ஸ்ரீராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார் என்கிறது ஸ்தல புராணம்.

கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை தரிசித்துப் பூரித்த ஆஞ்ச நேயரிடம், நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக! என அருளினார்!

அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.