எங்கு செல்லலாம்? எப்படி செல்லலாம்? என தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து சிந்தனை விரியலாயிற்று ...
இரஞ்சன்குடி கோட்டையும் (பெரம்பலூர்), கங்கை கொண்டச் சோழபுரமும் வெகு நாட்களாகவே எமது காண வேண்டிய பட்டியலில் நீடித்துள்ளதால் அவையும், அத்துடன் தலைக்காவேரி முதல் கொள்ளிடம் வரை குறித்த ஆவணப்படம் சமீபத்தில் EFI அலுவலகத்தில் கண்டிருந்தமையால் காவேரியோடு ஒட்டிய பயணம் குறித்தும் ஒரு உத்தேச பயணத் திட்டம் உருவாயிற்று!
EFI குறித்து மேலும் விபரங்களுக்கு: Environmentalist Foundation of India (E.F.I)
இதற்கு இரு சக்கர வாகனமே பொருத்தமாயிருக்குமென வண்டியையும் சர்வீஸ் செய்து ஆயத்தமானோம்.
என்னுடைய கனவு வண்டியில்லை, உயர்ரக வண்டியில்லை தான், ஆனால் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக 66000 கி.மீ க்கும் மேல் என்னுடன் பயணித்தவன், பயணித்துக் கொண்டிருப்பவன் .. கடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் (சென்னை பெருவெள்ளத்தில் கூட) .... எத்தனையோ நள்ளிரவு தனிப் பயணகள், வண்டியில் பயணிக்கும் பொழுதெல்லாம் ... பல நூறு ஆண்டுகளுக்கு முன் ... நான் குதிரைப்படை வீரனாகவும் அவன் என்னுடைய குதிரையாகவும் இருப்பதாகவே கற்பனை விரியும் ... எங்களுக்குள் ஏதோ ஒரு பிணைப்பு!
இவன் தான் என்னுடைய கருங்குதிரை, கருஞ்சிறுத்தை ... Night Fury, etc.
Bajaj Discover 150
முதல் இரு நாட்கள் தனியாகவும், கடைசி இரு நாட்கள் கல்லூரி நண்பர் ஒருவருடனும் 4 நாட்களுக்கு பயண திட்டம் தயாராயிற்று.
ஆனால் 4 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஒரு நாளாவது ஓய்வு அவசியம் எனக் கருதியதால் அலுவலகத்திற்கு ஒரு நாள் விடுப்பு எடுத்து 17-04-19 அன்று பயணத்தைத் தொடங்கினோம்.
நாள் 1: 17-04-19 (புதன்)
காலை 7.43 மணிக்கு மேடவாக்கத்திலிருந்து தொடங்கியது பயணம். தொடர் விடுமுறையின் காரணமாக பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் என செங்கல்பட்டு கட்டணச் சாவடி வரை ... போக்குவரத்து மெதுவாகவே நகர்ந்தது. ஏப்ரல் மாதக் கடைசி என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே. சுமார் 2 மணி நேரங்களுக்கு பிறகு மேல்மருவத்தூரைக் கடந்து ஒரு அய்யனார் கோவில் ஆலமரத்தில் சிறுது ஓய்வு!
ஓய்விற்குப் பிறகு தொடங்கியப் பயணம் விழுப்புரம் கடந்ததும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மாநில நெடுஞ்சாலைக்கு மாறியது. சாலையின் இரு புறமும் புளிய மரங்கள் இருந்ததால், (நன்கு காய்த்திருந்தது) பயணம் சற்று ரம்மியமாக, இச்சூழல் 4 அ 8 வழிச்சாலை வரும் வரை மட்டுமே!
சுமார் 12.30 மணியளவில் திருக்கோவிலூரை அடைந்ததும் "கயிறு திரித்தல்" நடைபெறுவதைக் கண்டோம். காவேரி கரையோர ஊர்களில் (திருச்சி, மண்ணச்சநல்லூர், சமயபுரம் பகுதிகளில்) "கயிறு திரித்தல்" தொழில் நடைபெறுவதைக் கண்டுள்ளோம்.
கயிறு திரித்தலில் ஈடுபட்டிருந்த அச்சிறுவனுடன் சிறிது நேரம் உரையாடினோம். அண்ணா அந்த கோவிலுக்கா (கபிலர் குன்று) சென்னையிலிருந்து வரீங்க? அவனால் அதை நம்ப முடியவில்லை ... நம் கண்ணில் கபிலர் காலத்து காட்சிகள் தூக்கத்தை தொலைக்க செய்வதை சொல்லி விளக்க இயலுமா? மெல்ல சிரித்து விட்டு அப்படியே கபிலர் குன்றை நோக்கி நகர்ந்தோம்.
கபிலர் குன்று
கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகு ஊட்டப்பட்டு உள்ளது.
இவ்விடம் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடமாகும். கடையேழு வள்ளல்களில் பாரியின் மறைவுக்கு பிறகு, பாரி மகளிர் அங்கவை, சங்கவை என்பவர்களை திருக்கோவிலூர் அந்தணன் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஒரு குன்றில் வடக்கு பக்கம் அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார்.
இவ்விடம் தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது.
இவ்விடம் தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது.
கபிலர் குன்றைக் கண்டப் பின் திருக்கோவிலூரில் பழச்சாறு அருந்தி விட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம். நேரமின்மை காரணமாக "உலகளந்த பெருமாள் கோயில், திருக்கோவிலூர்" கோபுர தரிசனம் மட்டுமே !
உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று.
திருக்கோவிலூரிலிருந்து இரஞ்சன்குடிக் கோட்டை நோக்கி பயணிக்கலானோம்.
திருக்கோவிலூரிலிருந்து அரியூர், அசனூர் வழியாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலை மூலம் பெரம்பலூர் சென்றடைவதுத் திட்டம். திருக்கோவிலூர் சுற்று வட்டாரத்தில் கரும்பு விளைச்சலின் காரணமாக வின்மாரில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது, வழி நெடுகக் கரும்பு கொண்டு செல்லும் வாகனங்களை காண முடிகிறது.
பெரம்பலூர் அருகில் வந்ததும் மீண்டும் ஒருமுறை பழச்சாறு அருந்தி விட்டு, சிறிய ஓய்விற்குப் பிறகு இரஞ்சன்குடிக் கோட்டை நோக்கி பயணித்தோம்.
திருக்கோவிலூரிலிருந்து அரியூர், அசனூர் வழியாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலை மூலம் பெரம்பலூர் சென்றடைவதுத் திட்டம். திருக்கோவிலூர் சுற்று வட்டாரத்தில் கரும்பு விளைச்சலின் காரணமாக வின்மாரில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது, வழி நெடுகக் கரும்பு கொண்டு செல்லும் வாகனங்களை காண முடிகிறது.
பெரம்பலூர் அருகில் வந்ததும் மீண்டும் ஒருமுறை பழச்சாறு அருந்தி விட்டு, சிறிய ஓய்விற்குப் பிறகு இரஞ்சன்குடிக் கோட்டை நோக்கி பயணித்தோம்.
சுமார் 3.30 மணி அளவில் இரஞ்சன்குடிக் கோட்டையை அடைந்தோம்.
இரஞ்சன்குடிக் கோட்டை
இந்த கோட்டையை ரஞ்சன்குடி கோட்டை என்றும் நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். சிவன் மற்றும் ஹனுமானுக்காக அர்ப்பணஞ்செய்த இந்து கோவில்களின் பழைய வளாகங்கள் இருந்த்தாக நம்பப்படுகிறது. 1751-ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பு காட்சியாக இந்த கோட்டை அமைந்துள்ளது.
இரஞ்சன்குடிக் கோட்டையைக் கண்டப் பின் எமதூர் - துறையூரை நோக்கிப் பயணித்தோம்.
பெரம்பலூர், குரும்பலூர் ... மலைகளைக் கடந்து துறையூர் செல்லும் சாலை ...
அப்பாடா வீட்டிற்கு வந்தாயிற்று .. நன்கு குளித்து சூடான சுவையான உணவு அம்மாக் கையால். பயண மற்றும் உண்டக் களைப்பில் படுத்த ஒருசில விநாடிகளில் உறங்கிப்போனோம்.
முதல் நாள் முடிவில் பயண தூரம்: 347 கி.மீ.
நாள் 2: 18-04-19 (வியாழன்)
காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு வாக்களித்து விட்டாயிற்று!
வாக்களித்தக் கையோடு மீண்டும் பயணம் "திருவெள்ளறை" நோக்கி.
திருவெள்ளறை ஸ்ரீ புண்டரீகாக்ஷன் கோயில்
திருவெள்ளறை திரு செந்தாமரைக்கண்ணன் (ஸ்ரீ புண்டரீகாக்ஷன்) கோயில், 108 திவ்யதேசங்களில் ஒன்று.
கோவில் வளாகத்தில் பல்லவர் காலத்து குடைவரைக் கோவிலும், கோவிலுக்கு பின்புறம் பல்லவர் காலத்து படிக்கிணறும் உள்ளது.
திருவெள்ளறைக் குறித்து விரிவான பதிவு: திருவெள்ளறை புண்டரீகாட்சன் (செந்தாமரைக் கண்ணன்) திருக்கோயில் - Thiruvellarai Pundarikakshan Temple
திருவெள்ளறையிலிருந்து திருவரங்கம் நோக்கி பயணித்தோம் ... புதிய கொள்ளிடம் பாலத்தின் வழியே. அருகிலிருந்த 200 ஆண்டுகள் பழைய பாலம் கடந்த ஆண்டு பெருவெள்ளத்தில் (காய்ச்சலால்!) இடிந்து போனது நினைவிருக்கலாம்.
தண்ணீர் குறைவாக சென்றாலும் மிகத் தெளிவான நீராய்!
தேர்தல் நாளென்பதால் உணவு விடுதிகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தமையால் இன்றும் மதியம் விரதம். ஒரு வழியாக ஒரு தங்கும் விடுதியில் (Service Apartments) அறை எடுத்து சில நிமிடங்கள் ஓய்வுக்குப் பின் திருவானைக்கோவில் சென்றோம்.
திருவானைக்காவல் (திருவானைக்கோவில்)
இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது.
பஞ்சபூதத் தலங்கள்:
கோவில் பெயர்
|
குறிக்கும் பூதம்
|
இடம்
|
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்
கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில் |
நிலம்
|
காஞ்சிபுரம்
திருவாரூர் |
திருவண்ணாமலை அண்ணாமலையார்
கோயில்
|
நெருப்பு
|
திருவண்ணாமலை
|
திருவானைக்கா ஜம்புகேசுவரர்
கோயில்
|
நீர்
|
திருச்சி
|
சிதம்பரம் நடராசர்
கோயில்
|
ஆகாயம்
|
சிதம்பரம்
|
திருக்காளத்தி காளத்தீசுவரர்
கோயில்
|
காற்று
|
திருக்காளத்தி
|
காலையிலிருந்து சுட்டெரித்த வெயில் பஞ்சபூத தலங்களில் நீருக்கான சிவாலயத்திற்கு நாம் வரும்பொழுது நல்ல மழை பொழிந்தது. சிவனே மழையாய் அருள் பொழிந்தது போல ... மண்ணும், மனமும் குளிர ... சிவனை வணங்கிவிட்டு அப்படியே திருவரங்கம் நோக்கி ..
திருவானைக்காவல் குறித்து விரிவான பதிவு: திருவானைக்கோவில் - Thiruvanaikoil
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
உலகின் இரண்டாவது பெரிய இந்து மதக் கோவில் (முதலிடம்: அங்கோர் வாட், கம்போடியா) மற்றும் பூஜைகளும், வழிபாடும் கருத்தில் கொண்டால் உலகின் பெரிய இந்து மதக் கோவில்.
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.
கோவிலின் பிரமாண்டத்தை வார்த்தைகளில் விளக்க இயலா, விழிகள் வீங்க நேரில் வியப்புற வேண்டிய ஆலயம்.
மம்மி (Mummy)
மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். திருவரங்கத்தில் இராமானுசரின் உடல் வெறும் கற்பூரம், சந்தனம் மற்றும் இன்னப் பிற பொருட்களோடு இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி, கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் அடையாளங் கொள்ளும் விதத்தில் உள்ளது.
பஞ்சரங்க தலங்கள்:
கோவில்
|
அமைவிடம்
|
ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில்
|
ஸ்ரீரங்கப்பட்டணம்
|
திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில்
|
திருவரங்கம்
|
சாரங்கபாணி திருக்கோவில்
|
கும்பகோணம்
|
திருஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில்
|
திருப்பேர்நகர் என்ற கோவிலடி (திருச்சி)
|
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில்
|
மயிலாடுதுறை
|
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் குறித்து விரிவான பதிவு: திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் - Srirangam Ranganathaswamy Temple
திருவரங்கம் அரங்கநாதரை வணங்கிவிட்டு சாலையோர உணவகத்தில் இரவு உணவை உண்டு மீண்டும் தங்கும் விடுதிக்கு.
இரண்டாம் நாள் முடிவில் பயண தூரம்: 401 கி.மீ.
நாள் 3: 19-04-19 (வெள்ளி)
பயணத்தில் நம்மோடு இணைய, நமது கல்லூரி நண்பரும் டோல்கேட் (#1) பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க .. அவரோடு மூன்றாம் நாள் பயணம் தொடங்கிற்று.
முதலில் கல்லணை நோக்கி ...
கல்லணை
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம்,தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது.இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு, என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு (கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.
கல்லணைக் குறித்து விரிவான பதிவு: கல்லணை - Kallanai
கல்லணையை ரசித்து விட்டு அப்பாலரங்கம் திரு ஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில் நோக்கி பயணித்தோம்.
கோவிலடி
கோவிலுக்கு செல்லும் வழியில் சிறியக் கடைதான் ஆனால் சூடான சுவையான இட்லி, வடை மற்றும் தேநீர் .. 2 பேருக்கும் சேர்த்து மொத்தமாக 46 ரூபாய் மட்டுமே, வியப்பு தாளாமல் விடை பெற்றோம்.
அப்பாலரங்கம்
பஞ்சரங்க தலங்களுள் மூன்றாவது தலம் திரு ஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில் (கோவிலடி)
திருப்பேர் நகர் என்பது இத்தலத்தின் பழம் பெயராகும்.
இப்பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுவதால் இவர் அப்பக்குடத்தான் என்று அழைக்கப்படுகிறார்
அப்பாலரங்கம் குறித்து விரிவான பதிவு: அப்பால ரங்கம், திருப்பேர்நகர் (கோவிலடி) - Appalarangam, Thirupper Nagar (Koviladi)
அப்பாலரங்கம் அரங்கநாதரை வணங்கிவிட்டு பூண்டி மாதா பேராலயம் நோக்கி பயணித்தோம். இன்று புனித வெள்ளி என்பது கூடுதல் சிறப்பு!
பூண்டி மாதா பேராலயம்
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் (Fr. Constentine Joseph Beschi J) முயற்சியால் கட்டப்பட்டது. அருட்தந்தை லூர்து சேவியரின் உடல் பூண்டி மாதா கோவிலின் உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் புனித தன்மையை உணர்ந்து, 1999-ல் இக்கோவிலுக்கு போப் ஜான் பால் II அவர்களால் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. பூண்டி மாதா திருத்தலத்தின் பலிபீடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்ததாக கூறப்படும் திருச்சிலுவையின் ஒரு சிறு பகுதி பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பூண்டி மாதா பேராலயம் குறித்து விரிவான பதிவு: பூண்டி மாதா பேராலயம் - Poondi Madha Basilica
பூண்டி மாதாவை பிரார்த்தனை செய்துவிட்டு கங்கைக் கொண்ட சோழபுரம் நோக்கி பயணித்தோம்.
திருக்காட்டுப்பள்ளி தடுப்பணை
திருக்காட்டுப்பள்ளி: இங்கு சுந்தர், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட அக்னீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு தான் காவிரி ஆற்றிலிருந்து குடமுருட்டி ஆறு பிரிகிறது.
நேரமின்மை காரணமாக பின்வரும் கோவில்களின் கோபுர தரிசனம் மட்டுமே!
அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோவில் (திருவையாறு)
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 51வது சிவத்தலமாகும்.
சுவாமிமலை முருகன் திருக்கோயில்
அறுபடைவீட்டில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கிமீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும். இக்கோவில் முருகனின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு ஆகும்.
திருப்புறம்பியம்
கொள்ளிடத்தின் கரையில் உள்ள திருப்புறம்பியம் என்ற இடத்தில் பல்லவன் அபராசிதவர்மனுக்கும், பாண்டியன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி.885 இல் நடந்தது. இதில் ஆதித்த சோழன், கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர். பாண்டியன் தோற்றான். கங்க மன்னன் பிருதிவிபதி இறந்தான். அபராசிதவர்ம பல்லவன் வென்றான். எனினும் ஆதித்த சோழனுக்கே பெரும்பயன் கிடைத்தது. சோழநாடு முழுவதையும் அவன் மீட்டுக் கொண்டான். போர் நடைபெற்ற பகுதியை இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். "உதிரம் வடிந்த தோப்பு" என்பது இன்று குதிரைத் தோப்பாக நிற்கின்றது.
நம்மால் திருப்புறம்பியம் காண இயலாமல் போனதில் மிகுந்த வருத்தமே!
வழியில் கீழணை, படித்துறையில் இறங்கி ஒரு குளியல் போட்டு விட்டு மீண்டும் கங்கைக் கொண்ட சோழபுரம் நோக்கி ...
கீழணை
இந்த அணை 1902 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் ஆங்கிலேய அரசால் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில் நீர்ப்பாசனத்திற்காகக் கட்டப்பட்டது. இதன் கட்டுமானத்தில் கங்கைகொண்டசோழபுரத்தின் இடிபாடுகளில் இருந்த கற்கள் பயன்படுத்தப்பட்டன. மேலணையிலிருந்து 70 மைல் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 20 கி. மீ. தொலைவிலும் இந்த அணை அமைந்துள்ளது. இதன் மதகுகள் கொள்ளிடம் ஆற்று நீரை பல்வேறு நீர்வழிகளில் பிரித்து விடுகின்றன. இவ்வணையிலிருந்து கொள்ளிடம் மண்ணியாறு மற்றும் உப்பணாறாகப் பிரிகிறது.
கீழணையில் இருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வருகிறது.
கீழணைக் குறித்து விரிவான பதிவு: கீழணை - Lower Anaicut
ஒரு வழியாக நாம் காணத் தவித்துக் கொண்டிருந்த கங்கைக் கொண்ட சோழபுரம் கோவிலை அடைந்து விட்டோம். மிக அற்புதமாக, கம்பீரமாக கங்கைக் கொண்ட சோழபுரம்!
கங்கைக் கொண்ட சோழபுரம்
சோழப்பேரரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் உள்ளது. கோவிலை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
சோழ சாம்பிராஜ்யத்தில் கற்பனையில் சில மணி நேரம் வாழ்ந்து விட்டு ... வீராணம் ஏரியின் பிரம்மாண்டத்தை வியக்க மேலும் பயணிக்கலானோம்.
வீராணம் ஏரி
சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கதை நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிட்டத்தட்ட 235 கிமீ தூரத்திலிருக்கும் ஒரு ஏரியில் இருந்து நீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஏரியானது, 16 கிமீ நீளமாகும். 4 கிமீ அகலம் கொண்டது இந்த ஏரி. ஆரம்ப காலத்தில் 74 மதகுகளும் , வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்டது இந்த ஏரி. ஆனால் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது.
வீராணம் ஏரி குறித்து விரிவான பதிவு: வீராணம் ஏரி (வீரநாராயணபுரம் ஏரி) - Veeranam Lake
கீழணையில் இருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வருகிறது.
வீராணம் ஏரியின் பிரம்மாண்டத்தை வியந்து விட்டு, பயணத்தின் மூன்றாம் நாள் ஏறக்குறைய முடிவுறும் தருவாயில் சிதம்பரத்தை நோக்கி ...
வழியில் கோப்பாடி கால்வாய் பாலம் மற்றும் இருபுறமும் வாய்க்கால்கள் நடுவில் சாலை ... சித்திரை பௌர்ணமி வேறு! இயற்கை எழில் கொஞ்சும் வயல் வெளிகளோடு ... இரவில் சிதம்பரத்தை அடைந்தோம். சித்திரை பௌர்ணமி நாள் என்பதால் இரவு தங்குவதற்கு பல விடுதிகளில் முயன்று இறுதியாக கோவிலின் கிழக்குக் கோபுரம் அருகிலே அறை கிடைத்தது.
இன்றும் மதியம் உணவருந்த நேரமின்மையால், அறை கிடைத்ததும் நன்றாகக் குளித்து விட்டு இரவு உணவை உண்டோம். 2-3 நாட்களாக படுக்கையில் படுத்த ஒரு சில விநாடிகளில் உறக்கம் எளிதாக, ஆழ்ந்து!
மூன்றாம் நாள் முடிவில் பயண தூரம்: 581 கி.மீ.
நாள் 4: 20-04-19 (சனி)
காலையில் எழுந்ததும் விரைவாகக் குளித்து முடித்துவிட்டு நடராசரை தரிசிக்க ...
சிதம்பரம் நடராசர் கோயில்
இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகும். மேலும் இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.
சிதம்பரம் நடராசர் கோயில் குறித்து விரிவான பதிவு தனியே!
நடராசரையும், கோவிந்த ராஜபெருமாளையும் நன்கு தரிசித்து விட்டு வந்தோம். பகல் பொழுதாயிற்று மதிய உணவை முடித்துக்கொண்டு கோப்பாடிக்கு நோக்கி மீண்டும் பயணிக்கலானோம்.
கோப்பாடி கால்வாய் பாலம் / தொட்டிப்பாலம்
கன்னியாகுமரி அளவு பெரியது இல்லை என்றாலும் கோப்பாடி (சிதம்பரம்) கால்வாய் பாலம் (# குறியீடு போல, இரண்டு பெரிய கால்வாய்களை கடந்து பாலத்தின் மேலே பயணிக்கும் கால்வாய் மற்றும் பாலம்)
கோப்பாடி கால்வாய் பாலம் குறித்து விரிவான பதிவு தனியே!
கோப்பாடி கால்வாயில் ஒரு குளியல் போட்டுவிட்டு வடலூரை நோக்கி பயணிக்கலானோம்.
வடலூர் நோக்கி பயணிக்கும் வழியில் புவனகிரி, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவதரித்த ஊர்.
புவனகிரி
வேங்கடநாதர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வேங்கடாசலபதியின் அருளால் மூன்றாவதாக ஒரு பிள்ளை தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தது. அவர்கள் அந்த குழந்தைக்கு வேங்கடநாதன் என்று பெயரிட்டனர். ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவதரித்த இல்லம்
பின்னர் ஒரு வழியாக வடலூர் வந்தடைந்தோம்.
சத்திய ஞான தர்ம சபை (வடலூர்)
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.
சத்திய ஞான தர்ம சபை (வடலூர்) குறித்து விரிவான பதிவு தனியே!
வடலூரிலிருந்து "திருமாணிக்குழி"க்கு பயணித்தோம்
திருமாணிக்குழி
அருள்மிகு வாமணபுரிஷ்வரர் திருக்கோயில் (திருமாணிக்குழி)
திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலிபால் மூன்றடிமண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து வழிபட்டாராதலின் இக்கோயில் 'மாணிகுழி ' என்று பெயர் பெற்றது. (மாணி - பிரம்மசாரி)
இங்கு சிவபெருமான் எப்போதும் சக்தியோடு சிவசக்தியாக இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. சன்னதி அருள்மிகு சிவனின் பள்ளியறை எனக் கருதப்படுகிறது.
ஒரு பூசாரி உதவியின்றி, நீங்கள் இறைவனை தரிசனம் செய்ய முடியாது. பக்தர்கள் இறைவனை வணங்குவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்னர் திரை வழி நீக்கப்படும். இந்த ஸ்தலபுராணத்தின் படி, இத்தலத்தில் ஒரு முறை வணங்குவது சிதம்பரத்தில் 03 முறை வணங்குவதும், திருவண்ணாமலையில் 08 முறை வணங்குவதும், காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதற்குச் சமனாகும்.
கோவிலுக்கு Google Maps உடன் போராடி நடை அடைப்பதற்கு (நடை அடைக்கும் நேரம்: இரவு 8.30 மணிக்கு) சில நிமிடங்களுக்கு முன் சென்றது தனிக்கதை!
நிலவொளியில் கோபுரத்தின் அழகையும், ஆலயத்தின் சுகந்தத்தையும் விளக்க வார்த்தைகள் இல்லை!!!
அருள்மிகு வாமணபுரிஷ்வரர் திருக்கோயில் குறித்து விரிவான பதிவு தனியே!
பின்னர் அங்கிருந்து கடலூர் நோக்கி பயணித்தோம், இரவு உணவிற்காக ஏதோ ஒரு சாலையில் செல்ல அது திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் நோக்கி ...
திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்
மகேந்திரவர்ம மன்னன் திருநாவுக்கரசரை கல்லில் கட்டிக் கடலில் போட்ட போது கல் தெப்பமாக மாறி திருப்பாதிரிப்புலியூரிலேயே கரை சேர்ந்ததாகக் கூறப்படுகின்றது. பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் 274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம் ஆகும்.
திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் குறித்து விரிவான பதிவு தனியே!
இங்கும் கோவில் நடை அடைப்பதற்குள் (நடை அடைக்கும் நேரம்: இரவு 9.30 மணிக்கு) சில நிமிடங்களுக்கு முன் சென்றது, எங்களுக்குள் இனம் புரியாத உணர்வு!
நான்காம் நாள் பல ஆலய வழிபாட்டுடன் மிக மன நிறைவாய். கடலூர் பேருந்து நிறுத்தம் அருகில் ஓர் உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு நண்பருக்கு பிரியா விடைக்கொடுத்தோம்.
பல வருடங்களுக்கு பின் கல்லூரி நண்பனுடன் 2 நாட்கள் ... எத்தனை, எத்தனை விவாதங்கள், உரையாடல்கள்!
நாம் மீண்டும் சென்னையை நோக்கி ... இரவில் அமைதியாக ... நிலவொளியை ரசித்துக்கொண்டு பயணிக்கலானோம்.
இரவில் மெதுவாக வண்டி ஒட்டியதால் (இடையிடையே சில தேநீர் நிறுத்தங்கள்) 21-04-19 காலை 4.23 மணிக்கு வீட்டை வந்தடைந்தோம்.
நான்காம் நாள் முடிவில் பயண தூரம்: 871 கி.மீ.
பயணத் தொகுப்பு
வழியெங்கும் வயல் வெளிகள், டெல்டா மாவட்டங்களை, நீர் மேலாண்மைக் குறித்து சிறிதளவு அறிந்துக் கொண்டோம். கடக்கும் ஊர்தோறும் சித்திரை திருவிழாக்கள். காவேரித் தாய் கிளைநதிகளாய், வாய்கால்களாய் என பலவாறு பிரிந்து விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமல்லாமல் சமயங்களையும் சேர்த்தே வளர்த்துள்ளாள். கரையெங்கும் சைவ, வைணவ திருத்தலங்கள் .. நாட்கள் போதா முழுதும் காண!
மன நிறைவான பயணம் ... இன்னும் சிலபல சராசரி நாட்களை (அ) மாதங்களாய் கடப்பதற்கு!!!
No comments:
Post a Comment