Showing posts with label பாண்டிச்சேரி - Pondicherry. Show all posts
Showing posts with label பாண்டிச்சேரி - Pondicherry. Show all posts

Saturday, April 3, 2021

மோட்டார் சைக்கிள் சுற்றுலா 2021 (நாள் 2) - Bike Trip 2021 (Day 2)

நாள் 2: ஏப்ரல் 3 (சனிக்கிழமை)

நேற்று இரவு 9 மணிக்கு முன்பாக படுத்து நன்றாக ஆழ்ந்து உறங்கியதால் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. தேநீர் அருந்தி விட்டு அப்படியே கடற்கரை நோக்கி ...

அழகான அமைதியான கடற்கரை .. ஆங்காங்கே அழகிய மின்னொளி விளக்குகள்!





சூரிய உதயம் ரசிக்க மிக பொருத்தமான இடம்.













அழகிய பிரெஞ்சு கலாச்சார கட்டிடங்கள்/தெருக்கள்
 








Notre Dame Des Anges (Our Lady of Angels Church, Puducherry)

புதுச்சேரியில் உள்ள நான்காவது பழமையான தேவாலயம் ஆகும். கிரேக்க ரோமன் கட்டிடக்கலையில் 1855 ஆம் ஆண்டில் நெப்போலியன் III ஆல் கட்டப்பட்டது.





காலை பொழுதில், தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில், புதுச்சேரி - Basilica of the Sacred Heart of Jesus (Pondicherry)



அறையிலிருந்து தேவாலயம்





பாண்டியின் அழகில் மயங்கி மீண்டும் ஊருக்குள்ளே ... பாரதி பூங்கா.

ஆயி மண்டபம், புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிறது. இது புதுவை மாநில சட்டப்பேரவைக்கு எதிரேயுள்ள பாரதி பூங்காவில் அமைந்துள்ளது. கிரேக்க - ரோமானிய கட்டிடக்கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயி என்ற தாசி, குளம் வெட்டி குடிநீர்ப் பஞ்சம் தீர்த்த மக்கள் தொண்டின் நினைவைப் போற்றும் வகையில் எழுப்பப்பட்டுள்ளது.





தூய அமலோற்பவ அன்னை பேராலயம் (புதுச்சேரி) - Immaculate Conception Cathedral (Pondicherry)





மணக்குள விநாயகர் கோவில்

இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது என்றறியப்படுகிறது. புதுச்சேரியின் சுற்றுலாத் தலங்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும். கோவிலின் உட்பகுதின் மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல வண்ண படங்கள் வரையப்பட்டு காண்பவரை அளவில்லா இன்பத்தில் ஆழ்த்தும் .கோவில் சுற்றுபுற சுவர்களில் அதைபோல் பல வண்ண படங்கள் வரையப்பட்டு உள்ளது.



நாம் சென்ற பொழுது தங்கத்தேர் உலா!



இன்றைய காலை பொழுது இயற்கையும், ஆன்மீகம் சுவைத்தாயிற்று ... அப்படியே சற்று வரலாறு பக்கம் திரும்புவோமா?

அரிக்கமேடு - Arikkamedu

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது.

ஆங்கிலத்தில் (ARIKAMEDU) அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்து. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது.

அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தளமாக விளங்கியது. வரலாற்றியல், தொல்லியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர்.

மேலும் விபரங்களுக்கு: அரிக்கமேடு

அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாத படி மேட்டுப்பகுதியாக மாமரத்தோப்புகளாக மட்டும் காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம் மட்டும்!











ஆள் அரவமற்ற இந்த பகுதியின் பண்டையகால புதைந்து போன வரலாற்றை காற்றின் ஓசையில் உணரலாம்!







காலை உணவை முடித்துவிட்டு ஒரு வழியாக பாண்டியை கடந்து கடலூர் ...



புனித டேவிட் கோட்டை (கடலூா்) - Fort St. David (Cuddalore)

கெடிலம் ஆற்றங்கரையில் அழிபாடுகளாக உள்ள புனித டேவிட் கோட்டை குறிப்பிடத்தக்க வரலாற்றை உடையது.செஞ்சி மன்னர்களால் கட்டப்பட்ட சிறிய கோட்டையாயிருந்த இது 1677 இல் செஞ்சிக் கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் மராட்டியரின் கைக்கு வந்தது. மராத்தியர்களிடமிருந்து பிரித்தானியரால் 1690 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையும் மற்றும் சுற்றிலும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களும் மொத்தமாக வாங்கப்பட்டன. இதன்பிறகு இக்கோட்டைக்கு சென்னை ஆளுநரான எலிகு யேல், புனித டேவிட் கோட்டை என்று பெயரிட்டார். மேலும் கோட்டையை வலுப்படுத்தானார். கோட்டை, மற்றுமுள்ள இடங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்காக விநோதமான வழிமுறை கையாளப்பட்டது. கோட்டையில் இருந்து வானை நோக்கி ஒரு பீரங்கிக் குண்டு சுடப்பட்டு, அந்த பீரங்கிக் குண்டு விழுந்த இடம் வரை கோட்டைக்குச் சொந்தமான பகுதியாக கைக்கொள்ளப்பட்டது. இன்றும் அந்தக் கிராமங்கள் ‘பீரங்கிக்குண்டு கிராமங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன.



























அழிந்து கொண்டிருக்கும் கோட்டையினை உள்ளூர் மக்களோ (அ) நகர நிர்வாகமோ சீரமைத்தால் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எளிதில் கொண்டு சேர்க்கலாம்.

கடலூர் கோட்டையினை பார்த்துவிட்டு மீண்டும் தொடங்கியது நமது பயணம். சிதம்பரம் புறவழி சாலையில் பயணித்து வையூரில் தயிர்சோறு 12.30 மணிக்கெல்லாம் சாப்பிட்டாயிற்று.

கோடையின் அணல் காற்று மோட்டார் சைக்கிளின் சூட்டோடு நம்மை நெருப்பு குளியல் எடுக்க வைத்தது. வண்டி கொள்ளிடம் ஆற்றை கடக்கையில் கீழே மக்கள் சிலர் குளிப்பதை கண்டு ... அப்படியே வண்டியை திருப்பி ஆற்றங்கரையில் இறக்கியாயிற்று...



ஆடைகளை களைந்து ஆற்றில் இறங்கி ... வெயில் நேரத்தில் ஆற்றுக் குளியல் ... இதமாக!



நன்கு குளித்து, குளிர்ந்து மீண்டும் பயணம். சீர்காழி தாண்டி உப்பனாறு ஒட்டிய ஒரு சாலை சந்திப்பில் திருவெண்காடு பெயர் பலகை. திருவெண்காடு பற்றி எப்பொழுதோ படித்த நியாபகம் .. ஒரு கரும்பு சாறு பருகியவாறு மீண்டும் பயணிக்க வேண்டிய ஊர்கள் பற்றிய திட்ட மாறுதல். திருவெண்காடு, பூம்புகார், தரங்கம்பாடி, நாகை பின்பு வேளாங்கன்னி என ...

திருவெண்காடு செல்லும் வழியில் திருக்காவளம்பாடி

திருக்காவளம்பாடி அருள்மிகு இராஜகோபலப் பெருமாள் திருக்கோயில்

திருக்காவளம்பாடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருநகரியிலிருந்து நடைப்பயணமாகவும் வரலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இத்தலமும் ஒன்றாகும்.






நாம் சென்ற பொழுது நடை அடைக்கப்பட்டிருந்தமையால் கோபுர தரிசனம் மட்டுமே!

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.






நாம் சென்ற பொழுது நடை அடைக்கப்பட்டிருந்தமையால் கோபுர தரிசனம் மட்டுமே!

அடுத்து ... காவிரிப்பூம்பட்டினம். கற்பனையில் ஏதோ ஒரு காலத்தில் குதிரையில் பயணிப்பதை போல ...

காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்)

பண்டைய தமிழ் நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந்நகரம், காவேரிப்பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது.







பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில் - Pallavaneswarar Temple

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 10வது சிவத்தலமாகும். காலவ முனிவர் வழிபட்ட தலம். பல்லவ மன்னன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு பல்லவனீச்சரம் என்று பெயர் வந்தது.



காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்)











மொத்த பூம்புகாரும் எந்தவித பராமரிப்பு இல்லாமல் வரலாற்று சுவடுகள் பொலிவிழந்து ... மனதில் ஏதோ இனம் புரியா வலி மட்டுமே!

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை.









வேண்டுதல்கள் இல்லா வழிபட்டு... கோவில் யானை அபிராமிக்கு கொய்யா மற்றும் ஆப்பிள் பழங்கள் வழங்கினோம். சிறார்கள் மிட்டாயை பார்த்ததும் பூரிப்பதை போல அபிராமியும் எத்தனை ஆனந்தமாய் ... எவ்வளவு பெரிய குழந்தை யானை!



அடுத்து தரங்கம்பாடி ... டேனிஷ் கோட்டை

சோழமண்டலக் கடற்கரை என்பது பன்னாட்டு வணிகப் பகுதியாக கி.மு 3ஆவது நூற்றாண்டிலிருந்து விளங்கியது. ஐரோப்பிய காலனிய அரசுகளான பிரித்தானியர் , பிரஞ்சியர் , டச்சு, போர்த்துகீசியர் போன்றோரால் கி.பி 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் போது இந்தியாவுடன் வணிகம் செய்ய கடல்சார் வர்த்தக நிறுவனங்கள் நிறுவப்பட்டன. டேனிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1616 இல் நிறுவப்பட்டு, அட்மிரல் ஓவ்கிட் (கி,பி.1594-1660 ) என்பவர் அனுப்பப்பட்டார். ஓவ்கிட் தஞ்சாவூர் ஆட்சியாளரான இரகுநாத நாயக்கருடன் (1600-34) 1620 ஆம் ஆண்டில் போர்த்துகீசியரின் எதிர்ப்பு இருந்தபோதிலும் ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி மொத்தம் 8 கி.மீ (5.0 மைல்) க்கு 4 கி.மீ (2.5 மைல்) பரப்பளவு இடத்தை ஆண்டு வாடகை ரூ 3111 என்ற ஒப்புதலுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியின் அண்டைக் கிராமங்களில் இருந்து வரி வசூலிப்பதில் டேனிஸ் அனுமதி பெற்றது. இந்த ஒப்பந்தம் ஒரு தங்க இலையில் போடப்பட்டது. இந்தக் கையெழுத்துப் பிரதி கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் அரச காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

டேனிஷ் கோட்டைகளில் இரண்டாவது பெரிய கோட்டை இதுவே ஆகும். முதல் கோட்டை யாது என்றால் அது ஷேக்ஸ்பியருக்கு ஹேம்லட் எழுத உத்வேகம் அளித்த க்ரோன்போர்க் கோட்டையாகும். இக்கோட்டை உள்ளூர் தொழிலாளர்கள் உதவியுடன் டேனிஷ் பாணியில் ஓவ்கிட்டால் கட்டப்பட்டது. கோட்டையை ஒட்டிய தரைத்தளம் கிடங்காகவும், படையினரின் ஒய்வறையாகவும் பயன்படுத்தப்பட்டது. அடுத்த தளம் ஆளுநர் மற்றும் மத குருக்கள் போன்றோர் வசிக்குமிடமாக இருந்தது. டேனிஷ் கோட்டை 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டேனிஷ்காரா்களின் மையமாக இருந்தது. முதலில் இப்பகுதி ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது. கோட்டை கட்டியபிறகு இங்கிருந்து பருத்தி, ஜவுளி போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் முதன்மை வாணிகத் துறைமுகமாக ஆனது. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்நகரத்தின் வர்த்தகரீதியான முக்கியத்துவம் குறைந்து, வங்காளத்தின் சிறீராம்பூர் ஜவுளி உற்பத்தி மையமாக ஆனது. என்றாலும் தரங்கம்பாடியிலேயே காலனியின் தலைமையகம் இருந்துவந்தது. 1845இல் இந்த நகரமும், கோட்டையும் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது. இதன்பிறகு தரங்கம்பாடியும் அதன் கோட்டையும் தன் வணிக முக்கியத்துவத்தை இழந்தன.






















நாம் தரங்கம்பாடி சென்றடைவதற்குள் கோட்டையின் பார்வையாளர் நேரம் முடிவடைந்து விட்டமையால் கோட்டையையும், ஊரையும் கடற்கரையோடு காலாற நடந்து ரசித்தாயிற்று!

அதிகமாக ஊர் சுற்றியதால் மாலை 6.30 மணிக்கெல்லாம் இரவு உணவு அருந்தியாற்று. இன்றைய தினம் முடிய நமக்கு இன்னும் சில மணி நேரங்கள் இருப்பதால் அடுத்து திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்


வேண்டுதல் இல்லா வழிபட்டு ... இங்கும் கோவில் யானைக்கு கொய்யா மற்றும் ஆப்பிள் பழங்கள் வழங்கினோம். யானை பாகனோடு விளையாடியதை புகைபடமெடுக்க அனுமதியில்லை ... அத்துனை ஆனந்தமாக பாகனோடு விளையாடும் யானை .. அளவில் பெரிய குழந்தையே!!!

அடுத்து நாகூர் தர்கா

நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் தர்கா உத்தரபிரதேசத்தின் மணிக்பூரில் பிறந்த சூஃபி துறவி ஷாஹுல் ஹமீத்தின் [1490 – 1579] கல்லறைக்கு மேல் கட்டப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சூஃபி துறவியின் 13 வது தலைமுறை வம்சாவளியைச் சேர்ந்த இவர், குவாலியரில் இஸ்லாமிய கல்வியைப் பெற்றார். அவர் எளிமையான மற்றும் பக்தியுள்ளவர் என்றும் அவரது அற்புதங்கள் அவருக்கு நாகூர் ஆண்டவர் என்ற பெயரைப் பெற்று தந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் மீரா சாஹிப் மற்றும் குவாதிர் வாலி என்றும் அழைக்கப்பட்டார்.

உள்ளூர் புராணத்தின் படி, அவர் தஞ்சாவூரின் ஆட்சியாளரான மன்னர் அச்சுதப்ப நாயக்கருக்கு சூனியத்தால் ஏற்பட்ட உடல் ரீதியான துன்பத்திலிருந்து குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மன்னர் 200 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார், மேலும் அவர் பரிசளித்த நிலத்தின் ஒரு பகுதியில் தர்கா கட்டப்பட்டது.

காலப்போக்கில் சன்னதி முக்கியத்துவம் பெற்றது. நாகூர் தர்கா 5 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இது அவரது இந்து பக்தர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரதான வளாகத்தில் நான்கு நுழைவாயில்கள் உள்ளன, மேலும் 5 மினார்கள் வெவ்வேறு உயரங்களில் உள்ளன. மீரான் சாஹிப் காலமான 200 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூரின் இந்து மராத்தா ஆட்சியாளரான பிரதாப் சிங், தர்காவில் ஐந்து மினார்களில் மிக உயரமான இடத்தைக் கட்டினார். துறவியின் கிருபையால் ஒரு நோயைக் குணப்படுத்திய ஒரு தச்சன் அவருக்கு மிகச்சிறந்த மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி செருப்பை பரிசளித்ததாக நம்பப்படுகிறது. இதை மியான் சாஹிப் பயன்படுத்தினார், கல்லறைக்கு அடுத்த தங்க பெட்டியில் இதை வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.


சாதி, மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல் எத்துனை மக்கள், எத்துனை குளுமையான தர்கா மனதை சாந்தமாக்கும் சுகந்தம்! கண்களை மூடி எதுவுமில்லாமல் ஆவதே .. மிகப்பெரிய தவம்!


இறை/இறைநிலை என்றால் சாதி, மத, இன, மொழி அப்பாற்பட்டது என்பதே நமது எண்ணம்!

பிறகு எதற்கு நாம் அத்தகைய அடையாளங்களோடு இறையை தேடி பயணிக்க வேண்டும். ஜைன, கௌமார, சிவ, வைணவ, காணாபத்ய, கிறித்துவ, இஸ்லாமிய என கடந்த 2 நாட்களாக சென்ற எல்லாமே நமக்கு ஆலயங்கள் தான் ... எல்லா ஆலயங்களிலும் அன்பும், மன அமைதியுமே பிரசாதமாக நமக்கு கிடைத்தது!

மிக நீண்ட நாள் இன்று, தோராயமாக 200 கிமீ தூர பயணம். ஆகையால் நாகையிலே ஓர் அறை எடுத்தாயிற்று! படுத்த சில நொடிகளில் ஆழ்ந்த உறக்கம்!