Saturday, April 3, 2021

மோட்டார் சைக்கிள் சுற்றுலா 2021 (நாள் 3) - Bike Trip 2021 (Day 3)

காலை 7 மணியளவில் விழித்து, தேநீர் அருந்தி காலை கடன்களை முடித்து, காலை உணவையும் முடித்தாயிற்று. இன்று ஈஸ்டர் திருநாள்! வேளாங்கண்ணியை நோக்கி நாமும் பயணத்தை தொடங்கினோம்!

காலையிலேயே கோடை சற்று கடுமையாகவே!!!


மதங்களை கடந்த மனிதர்களும் அதிகம் வருகை புரியும் இடம் என்பதால் அன்னையும் புன்னகையோடு அருள் பாலிக்கின்றார் அனைவருக்கும்!









கொளுத்தும் வெயிலில் முட்டி போட்டு வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள்... மாரியம்மன் கோவிலில் தீ மிதிக்கும் பக்தர்கள் போல!

எல்லா இடங்களிலும் பயமுறுத்தும் பக்திக்கு பஞ்சமில்லை!!!


இயேசு சிலை 


மன அமைதி பெற்று வேளாங்கண்ணியிலிருந்து விடை பெற்றாயிற்று!

அடுத்து நமது இலக்கு திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியே புதுக்கோட்டை நோக்கி!

வழியில் வெட்டவெளியில் தானியக்கிடங்கு ... மனதை பிழியும் வலி!


வேளாங்கண்ணியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் ஊர்தோறும் குளங்கள்... குளுமை!




ஏதேதோ ஊர்கள் வழியில் மோர், தர்பூசணி என கோடையின் வெப்பத்தை சமாளித்தவாறு. மதியம் 2 மணிக்கு சாப்பாட்டை முடித்து ... 

திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை கடந்து திருச்சி செல்லும் வழியில் 3.30 மணியளவில் சித்தன்னவாசல் வந்தாயிற்று.

சித்தன்னவாசல் 

சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 - 1200 ஆண்டு பழமையானவை.


படகு குளம் 






சமணா் கோயில் ஒன்று இருபுறமும் மகாவீரா் சிலைகளுடன் இங்கு காணப்படுகிறது. இந்த கோயில் தியான மண்டபம் அல்லது அறிவா் கோயில் என்றழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் மேல்புறத்தில் (ceiling) மகேந்திர வா்மன் காலத்து ஒவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்திய ஒவியக்கலை வரலாற்றில் அஜந்தா குகை ஒவியத்திற்கு அடுத்ததாக புகழ்பெற்ற ஒவியங்கள் அங்கு அமைந்துள்ளது. இங்குள்ள குகைகளின் மேற்கு சரிவிலும், மூலிகைகளினால் வரையப்பட்ட (Fresco – Paintings) ஒவியங்கள் காணப்படுகிறது. தமிழா்களின் கலை பண்பாட்டினை பாறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஒவியங்களாக இவை திகழ்கின்றன். ஓா் அழகிய குளத்தில் தாமரை மலா்கள், அல்லி மலா்கள், மீன்கள் நீந்துவது போலவும் எருமைகள் நிற்பது போலவும் யானைகள் தண்ணீா் குடிப்பது போலவும் கீரிப்பிள்ளை விளையாடுவது போலவும் அரசன் அரசியின் ஒவியங்களும் தத்தரூபமாக அமையப்பெற்றுள்ளது.



மாலை 4 மணி வரை தான் பார்வையாளர்களுக்கு அனுமதி. நம்மால் குகை ஓவியங்களை மட்டுமே பார்க்க முடிந்தது! முடிந்தால் அனைவரும் ஒரு முறை சென்று இறந்தகால சுவடுகளை உணர வேண்டிய அருமையான இடம். 


சித்தன்னவாசலில் அப்படியே பழங்கால கதைகளை நினைத்துக்கொண்டு இயற்கையோடு பொழுதை கழித்து, அடுத்து கொல்லிமலையா அல்லது நார்த்தாமலையா என மனதிற்குள் பட்டிமன்றம். 

கடுமையான வெயிலில் இன்று சுமார் 200 கிமீ தூர பயணம் மீண்டும் உடனே நெடிய பயணமா உடல் தயங்கிற்று!

கொல்லிமலைக்கு ஏற்கனவே நாம் பயணபட்டிருந்தமையாலும்,  தஞ்சை பெரியகோவிலுக்கு நார்த்தாமலையிலிருந்து பாறைகள் போனதாக எங்கோ படித்த செய்தி நியாபகம் வரவே இம்முறை  நார்த்தாமலையை  தேர்ந்தெடுத்தது மனது!

ஆதலால் இரவு பொழுதை புதுக்கோட்டையிலே கழிக்க முடிவெடுத்து மீண்டும் புதுக்கோட்டை நோக்கி திரும்பினோம் 


வழியில் பெருஞ்சுனை ஏரியில் சகதி பூசி ஒரு மணி நேர குளியல் ... உடலிலிருந்த வெப்பம், அசதி எல்லாம் குறைந்து புத்துணர்வு பெற்றோம். 

பெருஞ்சுனை கிராமத்தைச் சேர்ந்தவர் தான் திரு. சகாயம் IAS அவர்கள்!


பெருஞ்சுனையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி...

நன்றாக குளித்ததால் பசி அதிகமாகவே, சாலையோர பரோட்டா கடையின் சத்தமும் நம்மை கவரவே மாலை 6.30 மணிக்கெல்லாம் இரவு உணவு!

நன்றாக சாப்பிட்டு விட்டு புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரேயுள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினோம்.

நெடிய பயணம், நல்ல குளியல், நிறைவான உணவு ... வசதியான அறை .. அசதியில் படுத்த சில நொடிகளில் ஆழ்ந்த தூக்கம்!


மூன்றாம் நாள் இன்று சுமார் 200 கிமீ தூர பயணம்!

No comments:

Post a Comment