Friday, April 2, 2021

மோட்டார் சைக்கிள் சுற்றுலா 2021 (நாள் 1) - Bike Trip 2021 (Day 1)

சட்டமன்ற தேர்தல் (ஏப்ரல் 6, செவ்வாய் கிழமை) அதனையொட்டிய விடுமுறைகள் (ஏப்ரல் 2 புனித வெள்ளி, ஏப்ரல் 5 திங்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் 5 நாட்கள் தொடர் விடுமுறை) மனதில் வழக்கம் போல ஒரு மோட்டார் சைக்கிள் பயணத்திற்கான உத்தேச வழித்தடம் குறித்து திட்டமிட்டோம். இம்முறை உத்தேச பயணம் ஆதலால் தங்குமிடம் ஏதும் முன்பதிவு செய்யாமல் ... இம்முறை தனியே, எதை தேடுகிறோமென்றே தெரியாத ஒரு தேடல் பயணம்!

அலுவலக பணியும் சற்று அதிகமே, வியாழக்கிழமை காலை தொடங்கிய வேலை 2-3 மணி நேர தூக்கத்திற்கிடையே வெள்ளிக்கிழமை முற்பகல் வரை தொடர்ந்து ஒரு வழியாக முடித்தாயிற்று.

மீண்டும் மனதில் ஒரு எண்ணம் பேருந்தில் செல்லலாமா அல்லது மோட்டார் சைக்கிளா என பட்டிமன்றம் நடத்தி முடிவில் வரகு கூழ் ஒரு சொம்பு குடித்துவிட்டு 2-3 உடைகளை அள்ளிப்போட்டு ...  மோட்டார் சைக்கிளோடு கிளம்பியாற்று. மணி 12.30, உச்சியில் சூரியன் வெயில் பொழிந்தான்!

இம்முறை வேளாங்கண்ணி வரை செல்வோம் என்ற எண்ணத்தோடு கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்க தொடங்கினோம்.

முட்டுக்காடு


ஸ்ரீ முனிசுவிரத்சாமி ஜெயின் நவக்கிரக கோயில் (Shri Munisuvratswami Jain Navgraha Temple, ECR)





மிக நேர்த்தியாக வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள ஜைன கோவில் (ஜெயின்). முதற் தளத்தில் ஸ்ரீ முனிசுவிரத்சாமி நவகிரக கோவில். சிறப்பான கட்டிடக்கலையும், தரைதளத்தின் வெளிப்புற சுவர்களில் ஜைன கதைகள் ஓவியங்களாகவும் கடற்கரை காற்றோடு ஓர் அற்புதம். கோடையிலும் கோவிலின் உட்புறத்தின் குளுமை மற்றும் ஊதுபத்தியின் சுகந்தம் மனதை இலகுவாக்கும். 

பிறகு மீண்டும் கிழக்கு கடற்கரை சாலையில் புலிக்குகை அருகிலுள்ள முருகன் கோவில்.

சாளுவன்குப்பம் முருகன் கோவில்

இக்கோவில் கட்டுமானம் இரண்டு விதமாக அமைந்துள்ளதாக அகழ்வாய்வாளர்கள் நம்புகின்றனர். முதலாவது சங்க காலத்திய (கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை) செங்கல் கட்டுமானம் என்றும் இரண்டாவது இச்செங்கல் கட்டுமானத்திற்கு மேல் கட்டப்பட்ட பல்லவ காலத்திய (கிபி 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின்) கருங்கல் கட்டுமானம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இவ்வகழ்வாய்வை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் ஆய்வக ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் அகழ்வாய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட இவ்வகையைச் சேர்ந்த கட்டிடங்களிலேயே மிகவும் பழமையானது இச்செங்கல் கட்டுமானம்தான் என்கின்றனர்.


பெரும்பாலான இந்துக் கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில்தான் முருகக் கடவுளுக்குரிய கோவில்களிலேயே பழமையானது. தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவ காலத்துக்கு முந்தைய கோவில்கள் இரண்டில் இக்கோவில் ஒன்று. மற்றொன்று வேப்பத்தூரில் அமைந்துள்ள வீற்றிருந்த பெருமாள் கோவிலாகும்.

மாமல்லபுரத்தின் சாலையோர சிற்பக்கூடங்கள்


கொளுத்தும் வெயிலின் இடையே ஓர் இளநீர் இடைவேளை.

வாயலூர் தடுப்பணை

சில மாதங்களுக்கு முன் தடுப்பணை வழியே நீர் பொங்கி வழிந்தோடுவதை செய்திகளில் பார்த்ததால் ... வாயலூர் தடுப்பணை செல்ல குறுகலான தெருக்களின் வழியே, தெருக்களின் அமைப்பே நமக்கு புரியவைக்கும் சாதிய கட்டமைப்பை.

ஆற்றங்கரையில் வீடு, வெயில் தணிக்க ஆனந்த குளியல்... எளிய மக்களின் வாழ்க்கை முறை எவ்வளவு எளிமையாக இனிமையாக. 

திருப்புலீஸ்வரர் வைகுண்டேஸ்வரர் கோயில் (Tirupuliswar Vaikunteswar Temple) வாயலூர்

ஈசனும் பெருமாளும் ஒன்றாக உள்ள சில அரிதான கோவில்களுள் ஓன்று. திருப்புலிஸ்வரர் லிங்க வடிவாகவும், அதற்குப் பின்னால் பல்லவர்களின் கோயில்களின் கலையம்சமாக விளங்கும் சோமாஸ்கந்தர் (அமர்ந்த நிலையில் சிவன் மற்றும் பார்வதி அவர்கள் மடியில் குழந்தை முருகன்) அழகான சிலை நேர்த்தியாக  வடிவமைக்கப்பட்டுள்ளது .

ஸ்ரீதேவி பூதேவியுடன் வைகுண்ட பெருமாள் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார்.

மேலும் விபரங்களுக்கு: திருப்புலீஸ்வரர் வைகுண்டேஸ்வரர் கோயில்

வேண்டுதல்கள் இல்லா வழிபட்டு .. மீண்டும் பயணம்.

முதலியார்குப்பம் படகு குழாம் - Mudaliyarkuppam Boat House


உப்பு வயல்கள்

அந்தி வேளையில் 

இயற்கையின் தோரணவாயில்களா? துவாரபாலகர்களா?

மாலையில் பாண்டியை அடைந்தாயிற்று. இன்று புனித வெள்ளி ஏதேனும் தேவாலயம் சென்று இன்றைய தினத்தை நிறைவு செய்யலாமென தோன்றியது.

கூகுளின் (Google) உதவியோடு

தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில், புதுச்சேரி - Basilica of the Sacred Heart of Jesus (Pondicherry)

வேண்டுதல்கள் இல்லா வழிபட்டு மனம் சற்று அமைதியானது. அருகாமையிலே தங்குவதற்கு அறையும் கிடைத்தது. சாலையோர தள்ளுவண்டி கடையில் உண்டு வயிறும் நிறைந்தது.


நாள் 1 முடிவில் தோராயமாக 150 கிமீ தூரம் பயணித்தாயிற்று.

No comments:

Post a Comment