Tuesday, April 6, 2021

மோட்டார் சைக்கிள் சுற்றுலா 2021 - Bike Trip 2021

வரலாறு, புவியியல், ஆன்மீகம் என கலவையான மோட்டார் சைக்கிள் பயணம், 5 நாட்கள், 1000க்கும் மேற்பட்ட கிமீ தூரங்கள், எத்துனையோ புது மனிதர்களுடனான உரையாடல்கள் ... இம்முறை தனியே, எதை தேடுகிறோமென்றே தெரியாத ஒரு தேடல் பயணம்!!!






Monday, April 5, 2021

மோட்டார் சைக்கிள் சுற்றுலா 2021 (நாள் 4) - Bike Trip 2021 (Day 4)

விஜயாலய சோழீஸ்வரம்

தஞ்சை பெரியகோவிலுக்கு தேவையான பாறைகள் பெரும்பாலும் இங்கிருந்து சென்றதாக செய்தி!

விஜயாலய சோழீஸ்வரம் திருக்கோவில் சோழர்களின் முதல் மலை குகை கோவில்களில் ஒன்று, இங்குள்ள சிவன் கோவில் இடைக்கால சோழ மன்னான விஜயாலய சோழனால் கட்டபட்டது. விஜயாலய சோழன் ஸ்ரீ ராஜ ராஜ தேவரின் பட்டான் ஆவார். விஜயாலய சோழிஸ்வரம் திருக்கோவில் நார்த்தமலையில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் நகரத்தார் என்று அழைக்கப்படும் வணிகர் பெருமக்கள், மன்னர்களிடம் இருந்து கோயில்கள், குளங்கள், ஆகியவற்றுக்கான மானியங்களைப் பெற்று, அவற்றை சிறப்புற நிர்வகித்து வந்துள்ளனர்.

இந்தப் பகுதியை நீண்ட காலமாகப் பராமரித்து வந்ததுடன், கிராம மேம்பாட்டுப் பணிகள் மற்றும் வரி வசூலித்தல் ஆகியவற்றிலும் முழு முனைப்புடன் செயல்பட்டு நற்பெயர் எடுத்தனர். இதானால் இப்பகுதி செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் பகுதியாக, வணிகர்களின் தலைநகராக இருந்திருக்கிறது. குறிப்பாக, “நானாதேசத்து ஐநூற்றுவர்” என்கிற வணிகர் குழுவிற்கு தலைமைச் செயலகமாக இருந்திருக்கிறது.

இதனால், இந்த பகுதியை நகரத்தார் மலை என அழைத்து இவர்களை கௌரவித்தனர் மக்கள். இதுவே பிற்காலத்தில், நார்த்தாமலை என மருவி அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மலைகள் மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, பொன் மலை, மண் மலை என எண்பதுக்கும் மேற்பட்ட சிறிய குன்றுகள் உள்ளன.











தலச்சிறப்பு: விஜயாலய சோழீஸ்வரர் கோயில் தமிழக கோவில் கட்டிடகலை வரலாற்றில் ஏற்றமிக்கதொரு இடத்தை பெறுகின்றது. வேசரா கலைப்பணியை பின்பற்றி கட்டப்பட்டதொரு கோவில் ஆகும். நார்த்தமலையிலுள்ள விஜயாலய சோழீஸ்வரத்தைக் மேற்கு நோக்கி அமைந்த இத்தலம் ஆரம்பகாலச் சோழர்பாணிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தலத்தின் அமைப்பு அசாதாரணமானது. பிரதானக் கோயிலின் கருவறை வட்ட வடிவில் இருப்பது தனிச்சிறப்பு ஆகும்.

கருவறையில் பெரிய சிவலிங்கம் உள்ளது. பிரதான கோயிலின் அர்த்த மண்டபத்தில் சாந்து பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. உட்பிரகாரச் சுவர்களில் பண்டைய ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளன. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது. இத்தலத்தில் அதிட்டானம் முதல் உச்சிவரை கல்லாலானது. இத்தலம் கட்டுமான கற்கோயிலாகும். மூலஸ்தானத்திற்கு மேலேயுள்ள விமானம் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது.

முதல் மூன்று அடுக்குகள் சதுரமாகவும், அதற்கு மேலேயுள்ள அடுக்கு வட்டமாகவும், அதற்க்கு மேலே குமிழ்போன்ற சிகரமும் அதற்கு மேலே வட்டமான கலசமும் காணப்படுகின்றது. கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன. இது தமிழகக் கோயில் அமைப்பிலே தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கோயிலின் முன், மூடு மண்டபம் ஒன்று உள்ளது. சோழர் காலத்திற்கே தனித்துவமான சுவர்களும் அவற்றில் அழகிய வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. கூரையின் உட்புறத்திற் சிறுகோயில்கள் (பஞ்சரங்கள்) உள்ளது.

முன்னுள்ள மண்டபத்தின் தூண்கள் பல்லவர் பாணியிலேயே உள்ளன. ஒரு காலின் மேல் மறுகாலை வைத்த தோற்றமுடைய இரு தூவாரபாலகர்கள் நுழைவாயிலில் உள்ளனர். ஆரம்பகாலச் சோழர் கலைப்பாணியில் இத்தலம் முக்கிய அம்சமாகும். பிரதானமான கோயிலைச் சுற்றி ஏழு துணைக்கோயில்கள் இருக்கின்றன. நீண்டு செல்லும் குன்றின் முக்கால் பங்கு உயரத்தில் விஜயாலய சோழீஸ்வரம் கோயிலும் சுற்றி ஆறு சிறு கோயில் கட்டுமானங்களும், பிரதானக் கோயிலில் நந்திக்குப் பின்னால் இரு குடைவரை கோயில்கள் உள்ளன.

முதலாவது சமணர் குடகு அல்லது பதினெண்பூமி விண்ணகரம் என்று அழைக்கப்படும் பெரிய குகை. ஏழாம் நூற்றாண்டில் சமணர் குகையாக இருந்த இந்தக் குடைவரைக் கோயில் பிற்காலத்தில் விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதன் அர்த்த மண்டபத்தில் 12 ஆளுயர விஷ்ணு சிலைகள் உள்ளன. இந்த மண்டபத்திற்கு முன்னுள்ள மேடையின் பீடத்தில் யாளி, யானை, சிங்கம் உள்ளிட்ட உருவங்களை வரிசையாகக் கொண்ட சிற்பத்தொகுதி உள்ளது.

தெற்கே உள்ள பழியிலி ஈஸ்வரம் என்ற சிறிய குடைவரை சிவன் கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவராயர்களின் ஆட்சியின் கீழ் முத்தரையர் தலைவன் சாத்தன் பழியிலி கட்டியது. இத்தலம் காஞ்சி கைலாசநாதர் கோவில் விமானத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. கண்ணனூரில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட பாலசுப்பிரமணியர் கோயிலும், பெரிதும் இந்த அமைப்பையே கொண்டுள்ளது மற்றும் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோயில் அழகான சிறிய கோயிலாகும். இத்தலமும் மேற்படி பல்லவ பாணியையே பெரிதும் ஒத்திருப்பதும், குறிப்பிடத்தக்கது.

கடம்பர் கோயில்

நார்த்தாமலை ஊர் நுழைவாயிலுக்கு வலது பக்கத்தில் உள்ளது கடம்பர் மலைக்குன்று. இங்கு முதலாம் இராஜராஜ சோழன் (10-ஆம் நூற்றாண்டு) காலத்திய சிவன் கோயில் ஒன்று பிரதானமாக உள்ளது. இக்கோயிலில் மலைக்கடம்பூர் தேவர் வீற்றிருக்கிறார். இதற்கருகில் நகரீஸ்வரம் என்ற சிவன் கோயிலும் மங்களாம்பிகை அம்மன் கோயிலும் இருக்கின்றன. இந்தக் கோயில்கள் பாண்டிய மன்னன்மாறவர்மன் சுந்தரபாண்டியன் (13-ஆம் நூற்றாண்டு) காலத்தில் கட்டப்பட்டவை. இப்பகுதியில் மங்கள தீர்த்தம் என்ற குளம் உள்ளது. குன்றின் அடிவாரப்பகுதியில் பாறை குழிவாகக் குடையப்பட்டு பெரியதொரு கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அதில் சில இடங்கள் சேதமடைந்துள்ளன. முதலாம் ராஜராஜன் காலம் முதல் சோழ அரசர்களில் கடைசி மன்னனான மூன்றாம் ராஜேந்திர சோழன் காலம் வரையிலான கல்வெட்டுக்கள் இந்த வளாகத்தில் உள்ளன.

நார்த்தாமலை (குடகுமலை)














நான்காம் நாள் இன்று சுமார் 150 கிமீ தூர பயணம்!