நாள் 2: ஏப்ரல் 3 (சனிக்கிழமை)நேற்று இரவு 9 மணிக்கு முன்பாக படுத்து நன்றாக ஆழ்ந்து உறங்கியதால் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. தேநீர் அருந்தி விட்டு அப்படியே கடற்கரை நோக்கி ...
அழகான அமைதியான கடற்கரை .. ஆங்காங்கே அழகிய மின்னொளி விளக்குகள்!


சூரிய உதயம் ரசிக்க மிக பொருத்தமான இடம்.


காலை பொழுதில், தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில், புதுச்சேரி - Basilica of the Sacred Heart of Jesus (Pondicherry)

அறையிலிருந்து தேவாலயம்


பாண்டியின் அழகில் மயங்கி மீண்டும் ஊருக்குள்ளே ... பாரதி பூங்கா.
ஆயி மண்டபம், புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிறது. இது புதுவை மாநில சட்டப்பேரவைக்கு எதிரேயுள்ள பாரதி பூங்காவில் அமைந்துள்ளது. கிரேக்க - ரோமானிய கட்டிடக்கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயி என்ற தாசி, குளம் வெட்டி குடிநீர்ப் பஞ்சம் தீர்த்த மக்கள் தொண்டின் நினைவைப் போற்றும் வகையில் எழுப்பப்பட்டுள்ளது.


தூய அமலோற்பவ அன்னை பேராலயம் (புதுச்சேரி) - Immaculate Conception Cathedral (Pondicherry)


மணக்குள விநாயகர் கோவில்
இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது என்றறியப்படுகிறது. புதுச்சேரியின் சுற்றுலாத் தலங்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும். கோவிலின் உட்பகுதின் மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல வண்ண படங்கள் வரையப்பட்டு காண்பவரை அளவில்லா இன்பத்தில் ஆழ்த்தும் .கோவில் சுற்றுபுற சுவர்களில் அதைபோல் பல வண்ண படங்கள் வரையப்பட்டு உள்ளது.

நாம் சென்ற பொழுது தங்கத்தேர் உலா!

இன்றைய காலை பொழுது இயற்கையும், ஆன்மீகம் சுவைத்தாயிற்று ... அப்படியே சற்று வரலாறு பக்கம் திரும்புவோமா?
அரிக்கமேடு - Arikkamedu
அழிந்து கொண்டிருக்கும் கோட்டையினை உள்ளூர் மக்களோ (அ) நகர நிர்வாகமோ சீரமைத்தால் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எளிதில் கொண்டு சேர்க்கலாம்.
கடலூர் கோட்டையினை பார்த்துவிட்டு மீண்டும் தொடங்கியது நமது பயணம். சிதம்பரம் புறவழி சாலையில் பயணித்து வையூரில் தயிர்சோறு 12.30 மணிக்கெல்லாம் சாப்பிட்டாயிற்று.
கோடையின் அணல் காற்று மோட்டார் சைக்கிளின் சூட்டோடு நம்மை நெருப்பு குளியல் எடுக்க வைத்தது. வண்டி கொள்ளிடம் ஆற்றை கடக்கையில் கீழே மக்கள் சிலர் குளிப்பதை கண்டு ... அப்படியே வண்டியை திருப்பி ஆற்றங்கரையில் இறக்கியாயிற்று...

ஆடைகளை களைந்து ஆற்றில் இறங்கி ... வெயில் நேரத்தில் ஆற்றுக் குளியல் ... இதமாக!

நன்கு குளித்து, குளிர்ந்து மீண்டும் பயணம். சீர்காழி தாண்டி உப்பனாறு ஒட்டிய ஒரு சாலை சந்திப்பில் திருவெண்காடு பெயர் பலகை. திருவெண்காடு பற்றி எப்பொழுதோ படித்த நியாபகம் .. ஒரு கரும்பு சாறு பருகியவாறு மீண்டும் பயணிக்க வேண்டிய ஊர்கள் பற்றிய திட்ட மாறுதல். திருவெண்காடு, பூம்புகார், தரங்கம்பாடி, நாகை பின்பு வேளாங்கன்னி என ...
திருவெண்காடு செல்லும் வழியில் திருக்காவளம்பாடி
திருக்காவளம்பாடி அருள்மிகு இராஜகோபலப் பெருமாள் திருக்கோயில் திருக்காவளம்பாடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருநகரியிலிருந்து நடைப்பயணமாகவும் வரலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இத்தலமும் ஒன்றாகும்.


நாம் சென்ற பொழுது நடை அடைக்கப்பட்டிருந்தமையால் கோபுர தரிசனம் மட்டுமே!
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


நாம் சென்ற பொழுது நடை அடைக்கப்பட்டிருந்தமையால் கோபுர தரிசனம் மட்டுமே!
அடுத்து ... காவிரிப்பூம்பட்டினம். கற்பனையில் ஏதோ ஒரு காலத்தில் குதிரையில் பயணிப்பதை போல ...
காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) பண்டைய தமிழ் நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந்நகரம், காவேரிப்பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது.



பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில் - Pallavaneswarar Templeதேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 10வது சிவத்தலமாகும். காலவ முனிவர் வழிபட்ட தலம். பல்லவ மன்னன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு பல்லவனீச்சரம் என்று பெயர் வந்தது.

காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்)




நாம் தரங்கம்பாடி சென்றடைவதற்குள் கோட்டையின் பார்வையாளர் நேரம் முடிவடைந்து விட்டமையால் கோட்டையையும், ஊரையும் கடற்கரையோடு காலாற நடந்து ரசித்தாயிற்று!
அதிகமாக ஊர் சுற்றியதால் மாலை 6.30 மணிக்கெல்லாம் இரவு உணவு அருந்தியாற்று. இன்றைய தினம் முடிய நமக்கு இன்னும் சில மணி நேரங்கள் இருப்பதால் அடுத்து திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்
வேண்டுதல் இல்லா வழிபட்டு ... இங்கும் கோவில் யானைக்கு கொய்யா மற்றும் ஆப்பிள் பழங்கள் வழங்கினோம். யானை பாகனோடு விளையாடியதை புகைபடமெடுக்க அனுமதியில்லை ... அத்துனை ஆனந்தமாக பாகனோடு விளையாடும் யானை .. அளவில் பெரிய குழந்தையே!!!
அடுத்து நாகூர் தர்கா
நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் தர்கா உத்தரபிரதேசத்தின் மணிக்பூரில் பிறந்த சூஃபி துறவி ஷாஹுல் ஹமீத்தின் [1490 – 1579] கல்லறைக்கு மேல் கட்டப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சூஃபி துறவியின் 13 வது தலைமுறை வம்சாவளியைச் சேர்ந்த இவர், குவாலியரில் இஸ்லாமிய கல்வியைப் பெற்றார். அவர் எளிமையான மற்றும் பக்தியுள்ளவர் என்றும் அவரது அற்புதங்கள் அவருக்கு நாகூர் ஆண்டவர் என்ற பெயரைப் பெற்று தந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் மீரா சாஹிப் மற்றும் குவாதிர் வாலி என்றும் அழைக்கப்பட்டார்.
உள்ளூர் புராணத்தின் படி, அவர் தஞ்சாவூரின் ஆட்சியாளரான மன்னர் அச்சுதப்ப நாயக்கருக்கு சூனியத்தால் ஏற்பட்ட உடல் ரீதியான துன்பத்திலிருந்து குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மன்னர் 200 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார், மேலும் அவர் பரிசளித்த நிலத்தின் ஒரு பகுதியில் தர்கா கட்டப்பட்டது.
காலப்போக்கில் சன்னதி முக்கியத்துவம் பெற்றது. நாகூர் தர்கா 5 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இது அவரது இந்து பக்தர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரதான வளாகத்தில் நான்கு நுழைவாயில்கள் உள்ளன, மேலும் 5 மினார்கள் வெவ்வேறு உயரங்களில் உள்ளன. மீரான் சாஹிப் காலமான 200 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூரின் இந்து மராத்தா ஆட்சியாளரான பிரதாப் சிங், தர்காவில் ஐந்து மினார்களில் மிக உயரமான இடத்தைக் கட்டினார். துறவியின் கிருபையால் ஒரு நோயைக் குணப்படுத்திய ஒரு தச்சன் அவருக்கு மிகச்சிறந்த மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி செருப்பை பரிசளித்ததாக நம்பப்படுகிறது. இதை மியான் சாஹிப் பயன்படுத்தினார், கல்லறைக்கு அடுத்த தங்க பெட்டியில் இதை வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சாதி, மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல் எத்துனை மக்கள், எத்துனை குளுமையான தர்கா மனதை சாந்தமாக்கும் சுகந்தம்! கண்களை மூடி எதுவுமில்லாமல் ஆவதே .. மிகப்பெரிய தவம்!
இறை/இறைநிலை என்றால் சாதி, மத, இன, மொழி அப்பாற்பட்டது என்பதே நமது எண்ணம்!
பிறகு எதற்கு நாம் அத்தகைய அடையாளங்களோடு இறையை தேடி பயணிக்க வேண்டும். ஜைன, கௌமார, சிவ, வைணவ, காணாபத்ய, கிறித்துவ, இஸ்லாமிய என கடந்த 2 நாட்களாக சென்ற எல்லாமே நமக்கு ஆலயங்கள் தான் ... எல்லா ஆலயங்களிலும் அன்பும், மன அமைதியுமே பிரசாதமாக நமக்கு கிடைத்தது!
மிக நீண்ட நாள் இன்று, தோராயமாக 200 கிமீ தூர பயணம். ஆகையால் நாகையிலே ஓர் அறை எடுத்தாயிற்று! படுத்த சில நொடிகளில் ஆழ்ந்த உறக்கம்!