தல வரலாறு
நன்றி (Courtesy) Worldkovil.com
ஒருமுறை கயிலை வந்த பிரம்மதேவன் முருகப் பெருமானை கண்டும் காணாததுபோல் நகர்ந்தார். குமரன் பாலகன்தானே என்ற எண்ணம்.
உடனே முருகப்பெருமான் பிரம்மனை அழைத்து பிரணவத்துக்கு பொருள் கேட்க, அவர் பதில் கூறத்தெரியாமல் விழித்தார். உடனே அவரை சிறையிலடைத்தான் முருகன். இரும்பாலான அறையில் பிரம்மனை சிறைவைத்ததால் அந்த இடம் இரும்பறை என பெயர்பெற்றது. சுவாமி மலையில் முருகனிடம் பிரணவத்துக்குப் பொருள் கேட்ட ஈசன், இங்கு வேதாகமங்களுடைய பொருளைக் கேட்க, மலையின்மீது குருவாக இருந்து ஓதியதால், இத்திருக்கோவில் ஓதியமலை- ஓதிமலை என்று பெயர்பெற்றது.
ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமைவாய்ந்தது இக்கோவில். ஓலைச்சுவடிகள் கூறும் செய்திகளின்படி சேரமான் பெருமான், மனுநீதிச் சோழன், வஜ்ராங்க பாண்டியன் ஆகிய மூவேந்தர்களும் எட்டு புண்ணிய நதிகளிலிருந்து புனிதநீர் எடுத்துவந்து திருக்குட நன்னீராட்டு விழா நடத்திய பெருமைவாய்ந்த தலம். தமிழகத்தில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ள குன்றுகளில் மிகவும் உயரமானது ஓதிமலை. 70 டிகிரி கோணத்தில் செங்குத்தான இம்மலை தனிமலையாக உள்ளது. அடிவாரத்திலிருந்து 1,800 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. முருகன் ஆலயம் கற்றளியாக உள்ளது. முற்காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்டிருந்த இவ்வாலயம் 1932-ல் செங்கற்கலவை நீக்கி கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மலையின்மேல் கருவறையில் ஐந்து முகங்கள், எட்டுக் கரங்களுடன் நிறைநிலையில் அருள்புரிகிறான் முருகன். அது ஏன் ஐந்து தலை? எட்டுக் கரங்கள்?
பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான போகர் நவபாஷாண சிலை செய்வதற்காக பழனிநோக்கிச் சென்ற சமயம் வழிதெரியாமல் போகவே, இம்மலையின் அடிவாரத்தில் ஈசானிய திக்கில் முருகனை வேண்டி யாகம் நடத்தினார். அப்போது இத்தல முருகன் அவருக்கு வழிகாட்டி, இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள குமாரபாளையம் வரை உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு முகங்கள், 12 கரங்களுடன் இருக்கும் முருகன், போகருக்கு வழிகாட்ட ஒருமுகம் நான்கு கரங்களுடன் சென்றதால், ஓதிமலையில் ஐந்து முகங்கள், எட்டுக் கரங்களுடனும்; குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவிலில் ஒருமுகம், நான்கு கரங்களு டனும் இருப்பதாக தலபுராணம் சொல்கிறது.
பிரம்மனை சிறையிலடைத்து தானே படைப்புத் தொழிலைத் தொடங்கிய முருகன், பிரம்மாவுக்கு ஐந்து முகங்கள் இருந்ததுபோலவே தானும் ஐந்து முகங்களுடன் இருந்து படைப்புத் தொழிலைச் செய்தார். இந்த அமைப்பு ஆதிபிரம்ம சொரூபம் எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்துயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாகப் பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன் முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். அதன்படியே விடுவித்தார் முருகன் என்கிறது தலவரலாறு.
அம்பிகை இல்லாத சிவன்பிரம்மாவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான் கைலாசநாதராக மலையடிவாரத்தில் தனிக்கோவிலில் இருக்கிறார். உடன் அம்பிகை வரவில்லை. இரும்பறை கைலாசநாதர் கோவில் என்றழைக்கப்படுகின்ற இத்தலத்தில் அம்பிகை சந்நிதி கிடையாது. மற்ற பரிவார மூர்த்திகளும் கிடையாது. விநாயகர், நந்தி பின்னாளில் வைக்கப்பட்டது. அரசமரமும் ஆலமரமும் இத்தலத்திலுள்ளது விசேஷம்.
இத்திருக்கோயில் திங்கள், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் மற்றும் வளர்பிறை சஷ்டியிலும் மட்டுமே நடைத் திறக்கப்படும்.
நாங்கள் முருகனை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம். வழியில் இரும்பறை கைலாசநாதரை வணங்க இரும்பறை சென்றோம். அங்குள்ள குருக்கள் தான் இந்த ஓதிமலைக் கோவிலுக்கும் குருக்கள் போல அவர் நமக்கு வழங்கிய சில புகைப்படங்கள் ....
இரும்பறை கைலாசநாதர் திருக்கோயில்
ஓதிமலை முருகன்