சென்னையிலிருப்போர் பலமுறை இவ்வழியே பயணித்திருப்பர். நாமும் பலமுறை இவ்வழியே சென்றிருந்தாலும் இம்முறை வள்ளுவர் கோட்டத்திற்குள் ... (நீண்ட வருடங்களுக்குப் பிறகு)
வள்ளுவர் கோட்டம்
திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம். இது சென்னையில், கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
தோரணவாயில்
காண்போர் கருத்தை கவரும் வண்ணம் காந்தார கலை வடிவில் தோரணவாயில் அமைக்கப்பட்டு முகப்பில் ``அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’’ என்ற முதல் குறள் பொறிக்கப்பட்டுள்ளது.
அரங்க மண்டபம்
220 அடி நீளம், 100 அடி அகலம் கொண்ட கூடத்தில், 3,500 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை காணும் வண்ணம் தூண்களே இல்லாத பெரிய அரங்க மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்க மேடையின் நடுவே திருவள்ளுவரின் வண்ண ஓவியமும், இடதுபுறத்தில் சங்கப் புலவர்கள் அதங்கோட்டாசான் திருவுருவப்படமும், வலதுபுறத்தில் தொல்காப்பியர் திருவுருவப் படமும் அழகுக்கு அணி சேர்க்கின்றன.
சிற்பத்தேர் மற்றும் குறள் விளக்க சிற்பங்கள்
திருவாரூர்த் தேரையே சென்னை மாநகருக்கு கொண்டு வந்தது போல் வள்ளுவர் கோட்டத்திற்கு மணிமுடி வைத்தாற்போல் காண்போர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து உயர்ந்து நிற்பது சிற்பத் தேராகும். இதன் உயரம் தரையிலிருந்து 100 அடி. இதன் உச்சியில் மகுடம் போல் அமைந்துள்ள கருங்கல் கலயத்தின் உயரம் 5 அடியாகும். கலயத்திற்கு கீழே உள்ள தேரின் கூரைப் பகுதியில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
பெரியதும், சிறியதுமாக தேரின் பக்கத்திற்கு நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லால் ஆனது. பெரிய சக்கரத்தின் குறுக்களவு 11 1/2 அடி, பருமன் 1 1/4 அடி 10 அங்குலம், சிறிய சக்கரத்தின் குறுக்களவு 5 அடி 8 அங்குலம், பருமன் ¾ அடியாகும்.
இத்தேரை 7 அடி உயரமுள்ள 2 யானைகள் இழுப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தேரின் பீடப்பகுதிக்கும், கீழே அடிப்பக்கம் 25 அடி சதுர அடி வடிவில் 30 அடி உயரத்திற்கு எழுப்பப்பட்டுள்ளது. இதை சுற்றிலும் 133 அதிகாரங்களிலும் ஒவ்வொரு அதிகாரங்களிலும் ஒரு குறள் தேர்வு செய்து அதனை விளக்கும் அடிப்படையில் 133 அழகிய சிற்பக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன.
குறள் மணிமாடம்
குறள் மணிமாடத்தில் 1,330 குறட்பாக்கள் 5 அடி உயரம், 2 அடி அகலமுள்ள அறிய வண்ணச் சலவை கற்பலகைகளில் திறந்த புத்தக வடிவில் தூணுக்கு 2 அதிகாரங்கள் வீதம் பொறிக்கப்பட்டுள்ளன. அறத்துப்பாலின் 38 அதிகாரங்கள் கருநிறப் பளிங்கிலும், பொருட்பாலின் 70 அதிகாரங்கள் சாம்பல் நிறப் பளிங்கிலும், காமத்து பாலின் 25 அதிகாரங்கள் மற்றும் சங்கப் புலவர் ஐவர் பாடிய திருவள்ளுவ மாலை கருஞ்சிவப்பு பளிங்கிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
வேயா மாடம்
மணிமாடத்திற்கு மேலே 220 அடி நீளம், 140 அடி அகலம் கொண்ட வேயா மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தேரின் கலயம். தேர்க்கூரை, கருவறையிலுள்ள திருவள்ளுவர் சிலை ஆகிய மூன்றின் நிழல் உருவங்கள் தெரியும் வண்ணம் இரண்டு பெரிய நீர் நிலைகளும், ஒரு சிறிய நீர் நிலையும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர் கருவறை
கருவறையின் இருபகுதியில் 2 அடி உயரமுள்ள பீடத்தின் மேலே முப்பாலைக் குறிக்கும் வண்ணம் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் 7 அடி உயரமுள்ள ஒளிமிக்க கருங்கல்லாலான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.