தல வரலாறு
நன்றி (Courtesy) wikipedia.com
பர்வத மலை திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை. பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை, மலைகளின் அரசன் என்று பொருள். பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறுபெயர்களும் உண்டு.
இம்மலைமீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
மலைக்கோயிலுக்குச் செல்லும் வழி
இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மாதிமங்கலம் வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன.
நாமும் நமது நண்பர்கள் இருவரும் சென்னையிலிருந்து மதியம் 12:45 மணியளவில் போளூர் செல்லும் பேருந்தில் கிளம்பினோம். விரைவு / சிறப்பு / சில நிறுத்த பேருந்து என எதுவாக இருந்தாலும் எல்லா நிறுத்தங்களிலும் பேருந்து நின்றே செல்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, உத்திரமேரூர், வந்தவாசி, சேத்துப்பட்டு வழியில் பெரிய ஊர்கள் மட்டுமல்லாமல் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சுமார் இரவு 7 மணியளவில் போளூர் வந்தடைந்தோம். மழை பெய்திருந்தமையால் சேறும் சகதியுமாக போளூர் பேருந்து நிலையம். நாங்கள் சூடான தேநீர் அருந்திவிட்டு செங்கம் செல்லும் பேருந்திற்காக காத்திருந்தோம்.
பர்வதமலை உச்சியிலுள்ள அன்னதான கூடத்திற்காக காய்கறிகள் வாங்கி வந்திருந்தோம், பேருந்திற்கோ அதிக கூட்டம் வேறு .. ஒரு வழியாக இரவு 8 மணிக்கு நகர பேருந்தில் ஏறி தென்மாதிமங்கலம் சென்றடைந்தோம். அங்குள்ள ஒரு ஆசிரம அறையில் குளித்து விட்டு சுமார் இரவு 9 மணிக்கு மலை ஏற ஆரம்பித்தோம்.
(நாங்கள் இரவில் மலையேறி, காலையில் மலையிறங்கினோம், வாசகர்களின் வசதிக்காக எமது புகைப்படங்களை தலைகீழாக பதிவிட்டுள்ளோம்.)
தென்மாதிமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து மலையடிவாரத்தை அடையலாம். இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத்தொடங்குவர்.
வழியில் யானைக்கூட்டங்களை போன்ற பாறைகள் ...
சுமார் 700 படிகளை கடந்ததும் வலது புறத்தில் சித்தர் குகை ஓன்று ...
மீண்டும் படிகள்
சுமார் 1263 படிகளுக்கு அப்பால் பாதை கடினமானதாக
பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியிலிருந்து வரும் பாதையும் தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும் பாதையும் ஒன்று சேர்கின்றன.
இங்கிருந்து மேல்நோக்கி செல்லும் பகுதி நெட்டாக காணப்படும் இதற்கு குமரி நெட்டு என்று பெயர். இந்த இடத்தில் இயற்கையாய் அமைந்த சுனை (நீர் ஊற்று) உள்ளது, நீர் எடுப்பதற்கு கீழே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து உள்ளது கடப்பாறை நெட்டு. இம்மலையின் சிறப்பம்சமாக விளங்குவதே இந்த கடப்பாறை நெட்டாகும்.
கோட்டை
இந்த மலையில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும்விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.
கடப்பாறை நெட்டு
ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலே அமைந்துள்ள பாறைப் பாதையைக் கடக்க இந்த கடப்பாறை நெட்டு வழியாக ஏறிச் செல்லவேண்டும். இந்தக் கடப்பாறை நெட்டை ஏறியவுடன் இதற்கு அப்பால் இரண்டு பெரிய பாறைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றில் (மல்லிகார்ஜுனர்) சிவன் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது.
இந்த கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள இலிங்கம்,சிலைகளுக்கு பக்தர்களே நேரடியாக அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். மேலும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகனும் உள்ளார். இயற்கையான சூழலில் சுமார் 4560 அடி உயர மலையில் காணப்படும் இயற்கைக் காட்சிகளுக்காகவும், மூலிகைக் காற்றை சுவாசிக்கவுமே தற்போது அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.
யாருமில்லாத இரவில் சிவனோடு தனிமையில் மந்திரங்களோ செய்யுளோ தெரியாவிடினும் இளையராஜாவின் திருவாசகம் ஒலிக்கையில் ... உங்களது உணர்வுகளை விளக்க வார்த்தைகள் கிடைக்கா ... அந்த தருணத்திற்காக எத்துனை துயர் பட்டும் மலையேறலாம்.
கண்களில் நீர் வழிய .. ஓம் நமசிவாய!
இம்மலைக்கு வர வருடத்தின் அனைத்து நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் முழு நிலவன்று மலையேறுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மாலை வேளையில் மலையேறத்தொடங்கி இரவில் மலைக்கு வந்து இரவு முழுவதும் தங்கி மறுநாள் காலையில் மலையிலிருந்து இறங்கி விடுவது ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான உணவு, நீர் போன்றவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். மற்றும் மலை பாதையில் வழி துணையாக நாய்கள் (பைரவர்) வருகிறது என்பது சிறப்பம்சமாகும். இந்த நாய்கள் இந்த மலையில் வாழும் சித்தர்கள் என்று கூறப்படுகிறார்கள்.
எங்களோடு இரவில் பயணித்த பைரவர்
இரவில் நாங்கள் சிவனை வணங்கிவிட்டு அங்குள்ள ஆசிரமத்தில் ஓய்வெடுத்தோம். காலையில் மீண்டுமொரு முறை சிவனை வணங்கிவிட்டு மலையிறங்கினோம்.