வாரம் முழுவதும் Google தேடலில் கிடைக்கும் Codings ஐ பட்டி-டிங்கரிங் பார்த்து சொந்த Codings போல Project ல் இணைத்து ... சிலப்பல பிழைகளைச் (Bugs) சரிசெய்துக் களைத்து.... வரும் வார விடுமுறையில் உண்டும், உறங்கியும், வீட்டு வேலைகளுக்கு உதவுவது போல் பாசாங்கு செய்வதற்கு பதில் .... நண்பர்களோடு ஒரு சிறிய மலையேற்ற - அருவிக் குளியல் அடடா நல்ல யோசனைத் தான்.
நண்பர்கள் வீட்டிலிருந்து காலை மற்றும் மதிய வேளைக்கு உணவு செய்து "(கைலாஷ) கோனே அருவி"க்கு Scorpio வண்டியில் சென்னை போரூரில் இருந்து காலை 7:30 மணியளவில் கிளம்பினோம்.
சென்னையிலிருந்து பல வழித்தடங்கள் உள்ளன.
(குறிப்பு: ஊத்துக்கோட்டை-நாகலாபுரம் வழிச்சாலை மிக மோசமாக பழுதுப்பட்டுள்ளது.)
Route 1 (~100 KM): Porur - Chennai Bye Pass - Puzhal - Periyapalayam - Uthukottai - Nagalapuram - Kona Falls
Route 2 ( ~95 KM): Porur - Thiruvallur - Uthukottai - Nagalapuram - Kona Falls
Route 3 (~115 KM): Porur - Thiruvallur - Thiruthani - Nagari - Puttur - Kona Falls
திருவள்ளூர் - திருத்தணி - புத்தூர் வழி, மற்ற வழித்தடங்களை விட சிறந்ததாக நண்பர்கள் முன்னரே அறிவுறுத்தியிருந்தனர். ஆதலால் நாங்கள் அவ்வழியே பயணித்தோம்.
Courtesy: Google Maps
பூந்தமல்லியைத் தாண்டியவுடன் தேநீர் அருந்திவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தோம். வானமும் மேகமூட்டமாய் எங்கள் பயணத்திற்கு ஏதுவாக அமைந்தது.
புத்தூரைத் தாண்டியவுடன் வயல்வெளி ஓரத்தில் அமர்ந்து காலை உணவை உண்டோம்.
நமக்கு முன்னரே அவ்விடத்தில் பலர் உண்டு அவ்விடமெங்கும் குப்பைகள் .... காலை உணவு உண்டப் பின் அவ்விடத்தை நம்மால் முயன்ற அளவு குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினோம்.
குளிர்ந்தக் காற்று, இனிய பாடல்கள் .. நண்பர்களோடு பயணம் மனதின் அனைத்து அழுத்தங்களையும் இலகுவாக்குகின்றது.
தோராயமாக 11 மணியளவில் அருவியை வந்தடைந்தோம்.
வாகன நிறுத்தத்திற்கென கட்டணம் இல்லாவிட்டாலும் வசூலிகின்றனர்.
குரங்குகள் மிக அதிகம் ஆகையால் உணவுப்பொருட்களை எடுத்து செல்கையில் கவனம் வேண்டும். அருவி அடிவாரத்தில் திண்பண்டங்களுக்கென சில கடைகளும் உள்ளன.
அருவிக்கென தனியாக நுழைவுக்கட்டணம் வசூலிகின்றனர் ஆனால் எந்தவிதக் கைபைகளின் சோதனையின்றி ... இதனால் கிட்டத்தட்ட இவ்வருவி திறந்தவெளி பார் போலவே பெரும்பாலும் தோன்றுகிறது .. அத்துடன் எங்கும் பாலீத்தின் குப்பைகள் வேறு ...
ஜூலை மாத இறுதியில் சென்றதால் அருவியில் நீர் வரத்து மிகக் குறைவாகவே. இறையில் நம்பிக்கை உள்ளவர்கள்அருவியின் அடியில் உள்ள கோவிலில் வணங்கிவிட்டு மலையேறலாம். அருவி வழிந்தோடும் பாதையில் ஷாம்பூ மற்றும் ஏனைய குப்பைகளை பார்க்கையில் மனதிற்கு கடினமானதாகவே இருக்கிறது. நமது சமூகத்திற்கு சுற்றுச்சூழல் குறித்த போதிய விழிப்புணர்வு பெற இன்னும் வெகுகாலம் ஆகும் போல.
மலை அடிவாரத்தில் உள்ளூர்வாசிகள் அருவி / இயற்கை நீச்சல் குளத்திற்கு வழிக்காட்டக் கட்டண அடிப்படையில் இருந்தாலும் ஒரு சிறிய "திரில்"லுக்காக நாங்களே மலையேறுவதென முடிவெடுத்து மலையேறினோம்.
இங்கு மலையேற்றம் சற்றுக் கடினமானதாகவேத் தோன்றுகிறது, தகுந்த காலணிகளோடு செல்வது நல்லது. திக்குத்திசை தெரியாமல் மலையேறுவது எவ்வளவு தவறு என உணர்கையில் உடல் ஏறக்குறைய சோர்ந்தே விட்டது.
அனைவரும் அழைந்துக் களைப்பதற்குப் பதில் இருவர் அருவி / இயற்கை நீச்சல் குளத்தைத் தேடினோம்.
ஒருவழியாக தக்கப் பாதையைக் கண்டுப்பிடித்து அருவியை அடைந்தோம்.
களைத்த வேளையில் குளிர்ந்த நீரில் குளிப்பது ... பேரானந்தம்!
(அவ்வப்பொழுது சிற்றுண்டி .. வேறு ... )
ஏனைய நண்பர்கள் இவ்வருவியிலே நேரத்தை கழிக்க விரும்பினாலும் நாம் இன்னும் மேலே நகர்ந்தோம்.
மனிதக் காலடிச்சுவடுகள் குறைகையில் இயற்கை பேரழகாய் ...
அருவிகள் இயற்கை நீச்சல் குளங்கள் ...
பெரும்பாலும் வேர்களின் உதவியால்
மேலே ஏறினோம். உடல்வழுவோடு மனவழுவும் இருந்தால் இங்கு இயற்கையோடு சில
மணித்துளிகள் கலக்கலாம்.
பொழுதை நன்கு களித்து ... கீழே இறங்கி மதிய உணவை மாலையில் உண்டு ... மீண்டும் சென்னை நோக்கி பயணத்தை தொடங்கினோம்.
வழியில் கொய்யா பழங்கள் வாங்கி ... நல்ல சுவையோடு சுவைத்து, இசையில் மிதக்கையில் நமது வண்டி மழையில் ... சாலையில் மிதமான வேகத்தில் மிதப்பதுப்போல ....
இடையே தேநீர் ... சென்னை வந்தாயிற்று!
வழக்கமான வழக்கங்கள் வழக்கமிழக்கையில் மீண்டும் ஓர் பயணத்தில் சந்திப்போம்.