துறையூர்களைப் பற்றி ஆய்கையில் திருத்துறையூரைப் பற்றி அறிந்து நாம் அங்கு பயணப்பட்டோம்.
திருத்துறையூரைப் பற்றி ஒரு முன்னூட்டம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்களில் (
ஏழாம் திருமுறை) பாடப்பெற்றத் திருத்தலம். (தமிழ் ஆர்வலர்களுக்காக பாடல் 123 (7.13.1) முதல் 7.13.11 (133) வரை வாசிக்க.)
சுந்தரர் காலத்தில் ஊரில் தென்பால் ஓடிய பெண்ணையாறு; இன்று வடபால் ஓடுகிறது. (பழைய பெண்ணையாறு, மலட்டாறு, வறட்டாறு, ஓரையாறு என்னும் பெயரில் தென்பால் உள்ளது.)
திருத்துறையூர் பன்ருட்டிக்கு வடமேற்கே 8 கி.மீ. தொலைவிலுள்ளது.
(Courtesy: Google Maps)
நாம் ஊரை அடைந்தபொழுது கோவில் நடை அடைக்கப்பட்டிருந்தமையால், நடை திறப்பதற்குள் ஊரைச் சுற்ற கிளம்பினோம்.
கோவிலுக்கு எதிரில் தெப்பக்குளம், தரையோடு தரையாக ஒட்டினாற்போல் தண்ணீர்.
ஊரின் வடதிசைச் சாலையில் நடக்கலானோம்.
வறண்ட குளமோ / சிறிய ஏரியோ?
ஆள் ஆரவாரமற்ற... அமைதியான சாலையில்... வட திசை நோக்கி....
சவுக்குத் தோப்புகள், கரும்புத் தோட்டங்கள், பனை, தென்னை மரங்கள், வாழை மரங்கள் ... என வழி நெடுக இயற்கையெழில் கொஞ்சும் வயல்வெளிகள். காற்றில் வரும் ஓசையை கேட்கையில் ஏதோ ஓடையோ / ஆறோ அருகிலிருப்பதைப் போல் தோன்றியது. (ஆனால் அப்படி எதுவுமில்லை.)
சுமார் 2 கி.மீ தொலைவில் நமது சாலையின் இடப்புறம் ஏரி ஒன்று, சமீபத்தில் பெய்த மழையால் சிறிது தேங்கிய தண்ணீர். ஏரிக்கரையில் ஆலமரம்... அட நாம் சிறிது களைப்பாறலாமே!
(தண்ணீர் பாட்டில், ரொட்டித்துண்டுகளும் கிடைத்தாலே நமக்கு அதிர்ஷ்டம் எனலாம், அப்படிப்பட்ட சிற்றூர்!)
ஆலமரத்தடியில் ஓய்வெடுத்தப்பின்னர், ஏரியை நமது புகைப்படக் கருவியால் சிறைபிடித்தோம். (புகைப்படமெடுக்க ஆலமரத்திலேறி கீழே விழுந்தது, தனிக்கதை!)
ஏரியின் தென்பாதி
தென்பெண்ணையாற்றை நோக்கிச் செல்லும் சாலை
ஏரியின் வடபாதி
ஏரியின் நடுவில் சிவலிங்கம், (தொன்மயான வரலாற்றை நம்மால் அறிய முடியவில்லை என்பதில் சற்று வருத்தமே!)
மீண்டும் சவுக்குத் தோப்புகள், கரும்புத் தோட்டங்கள், பனை, தென்னை மரங்கள், வாழை மரங்களைக் கடந்து ....
பலா மரம் !!!
தூக்கனாங்குருவிக் கூடு
நமது கண்ணில் அகப்பட்டு புகைப்படக்கருவியிடமிருந்து தப்பியவைகள்: ரெட்டை வால் குருவி, எறும்புத்திண்ணியா / உடும்பா எனத் தெரியவில்லை, பாம்பு ....
இத்துனைச் சோலைகளைக் கடந்து பெண்ணையைக் காண்கையில் நமக்கு பெரும் ஏமாற்றமே!
பெண்ணையா, பாலையா என்பது போல் ...
நெடு நேரமானதால், மீண்டும் கோவிலை நோக்கி தென்பெண்ணையிலிருந்து தெற்கே நடக்கலானோம் வழித்தடங்களின் இயற்கையோவியங்களை ரசித்தவாறு!
தலச் சிறப்புக்கள்
தென்பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது;
மேற்கு நோக்கிய சந்நிதி.
சுந்தரர் தவநெறி வேண்டிப்பெற்ற தலம்.
'சிவஞானசித்தியார்' என்னும் சாத்திர நூலைப் பாடிய அருணந்தி சிவாசாரியார் (சகலாகம பண்டிதர்) அவதரித்து வாழ்ந்த தலம்.
அம்பாள் சந்நதி வடக்கு நோக்கி
தலமரத்திற்குப் பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம்
கொடிமரம்
தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு தவநெறி தந்த காட்சி, சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது.
சைவ சமய குரவர்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்)
கோவிலைச் சுற்றிலும் கல்வெட்டுகள்
(கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் "ராஜராஜ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருத்துறையூர் " என்றும்; இறைவன் பெயர் "தவநெறி ஆளுடையார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் செய்தி. )