Sunday, July 23, 2006

முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் - Muthumalai Wild Animal Sanctuary

முதுமலை வனவிலங்கு காப்பகம் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940 இல் தொடங்கப்பட்ட இதுவே தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகம் ஆகும். தொடக்கத்தில் 60 சதுர கிமீ பரப்பு கொண்டதாக இக்காப்பகம் இருந்தது. பின் 1956 ஆம் ஆண்டு 295 கிமீ2 ஆக விரிவுபடுத்தப்பட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு தற்போதுள்ள 321 கிமீ2 பரப்பளவை அடைந்துள்ளது.

இக்காப்பகத்தில் முதுமலை தேசிய வனபூங்கா 103 கிமீ பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பந்திப்பூர் தேசிய பூங்காவும் கேரளாவில் வயநாடு வனவிலங்கு காப்பகமும் உள்ளன.

முதுமலை வனவிலங்கு காப்பகம் உதகமண்டலத்ததிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ளது. மோயாறு ஆனது இக்காப்பகத்தின் ஊடாக செல்லுகிறது. இங்குள்ள யானைகள் முகாம் பார்வையாளர்களை கவரும் ஒன்றாகும்.

விலங்குகள்

யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், பெரிய இந்திய சிவப்பு அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி, காட்டு முயல், முதலை, கீரி, கழுதைப்புலி, மலைப்பாம்பு போன்ற பல்வேறு வகையான விலங்குகள் இங்கு உள்ளன.

மயில், பல்வேறு வகையான காட்டுக்கோழிகள், புறா, கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பல்வேறு வகையான பறவைகள் இங்கு உள்ளன.





உதகை - OOTY

ஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் தமிழத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ளது.

12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையில் ஹொய்சாளர்களின் ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின் மைசூர் இராஜ்ஜியத்தில் ஒரு பகுதி ஆன உதகமண்டலம் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது. அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆளுனராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் முதலிய பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கினார்.

நீலகிரி மலை இரயில் ஆங்கிலேயரின் ஆட்சியில் இம்மலைப் பிரதேசம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், நீலகிரி மலை இரயில் பாதையும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை, ஆங்கிலேயருக்கு கோடைக் காலத் தலைநகரமாக விளங்கியது.